Friday, April 26, 2024
Home » கணினி கற்கை நிலையம் திறந்து வைப்பு
அக்குறணை மள்வானஹின்ன பிரதேசத்தில்

கணினி கற்கை நிலையம் திறந்து வைப்பு

by sachintha
November 17, 2023 5:59 am 0 comment

தொழிலதிபர் நவாஸுக்கு பாடசாலை சமூகம் பாராட்டு

முக்கிய பிரமுகர்களும் விழாவில் பங்கேற்பு


அக்குறணை மள்வானஹின்ன பிரதேச பாடசாலைப் பிள்ளைகளின் நலன்கருதி மள்வானஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் கட்டடத்தில் அமைந்துள்ள கணினி தொழில்நுட்ப கற்கை நிலைய திறப்பு விழா மற்றும் விசேட வைபவம் ஆகியன மள்வானஹின்ன பாடசாலை மண்டபத்தில் பிரதேச செயற்கை நுண்ணறிவு கிராமத்தலைவரும் தொழிலதிபருமான டி. எல். எம். நவாஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் றிஸ்வி முப்தி மேற்படி கற்கை நிலையத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்காக வைபவரீதியாக திறந்து வைத்தார்.

இதில் சப்ரகமுவ பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம், கொழும்பு பல்கலைக்கழக சட்டத் துறை சிரேட்ட விரிவுரையாளர் கலாநிதி சாமிலா தாவூத், முஸ்லிம் எயிட் பணிப்பாளர் எம்.சி. பைஸர் கான், பாடசாலை அதிபர் இம்ரான், ஆசிரியர், பெற்றோர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மள்வானஹின்ன செயற்கை நுண்ணறிவுக் கிராமத்தின் தலைவர் தொழிலதிபர் டி. எல். எம். நவாஸ் தனது தலைமையுரையில்;

இக்கிராமத்தை ஒரு நுண்ணறிவு கிராமமாக மாற்றியமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த நான்கு வருடங்களாக பல வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இத்திட்டதின் மூலம் ஐந்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது இப்பிரதேசத்தின் தகவல்களைச் சேகரித்தல், பிரதேசத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் விருத்தியை ஏற்படுத்தல், பிரதேசத்தின் சுற்றுச் சூழலை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளல் போன்ற திட்டத்தின் கீழ் பொதுச் சிரமதானங்கள், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வூட்டும் விளம்பரப் பதாகைகள் காட்சிப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல், இறுதியாக வளங்களை அபிவிருத்தி செய்தலும், ஸகாத்தையும் ஒழுங்கான முறையில் நிர்வகித்தல் போன்ற முக்கியமான செயற்பாடுகள் போன்றன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், எமது பிரதேச மாணவர்களின் மூன்றாம் நிலைக் கல்வியைக் கருத்திற் கொண்டு கணினி தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்கான பயிற்சி கூடத்தை இன்று நாம் திறந்து வைத்துள்ளோம்.

விசேடமாக மள்வானஹின்ன முஸ்லிம் பாடசாலை என் தந்தை படித்த பாடசாலையாகும். நானும் அங்கு ஓரிரு வகுப்புக்கள் படித்துள்ளேன். இன்று இப்பாடசாலைக்கு சிறந்த அதிபரொருவர் கிடைத்திருக்கிறார். இப்பாடசாலையின் மேலதிக தேவையைக் கருத்திற் கொண்டு மூன்று மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதியை விரைவில் நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளேன் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாடசாலையில் கட்டட வளங்களை பெற்றுக் கொள்வது மாத்திரமல்ல, எதிர்காலத்தில் பிள்ளைகளிடத்தில் இருந்து நல்ல அறுவடைகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த ஊரைப் பொறுத்தவரையில், இந்த ஊரின் முன்னேற்றத்திற்காக பள்ளி நிர்வாகிகளும், ஊர் பிரமுகர்களும், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹுதா பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எச்.எம். பாயிஸ், மள்வானஹின்ன பள்ளிவாசல் தலைவர் நௌஷாட் ஹாஜியார் மற்றும் சாலிஹீன் பள்ளிவாசல் மௌலவி எஸ். எம். எம். பாயிஸ் ஆகியோர்களுடைய பங்களிப்பு மகத்தானதாகும்.

ஒவ்வொரு வாரமும் இந்தப் பிரதேசத்தில் ஏதாவது சமூகம் சார்ந்த விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது உண்மையிலே வரவேற்கத்தக்க விடயம். ஆனால் அக்குறணையில் இப்படியான நிகழ்வுகளைக் காண்பது குறைவு.

மள்வானஹின்ன பிரதேசத்தின் நலனின் மேம்பாட்டுக்காக யார் யாரெல்லாம் தொடர்பு இல்லாமல் இருக்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயற்பட முன்வர வேண்டும். இளைஞர்களும் இணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் கணினி தொழில்நுட்ப கற்கை நிலையத்தை இங்கு கொண்டு வருவதற்கு அயராது பாடுபட்ட பைஸர் கான் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தப் பிள்ளைகளுக்கு கற்றலை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்ல சர்வதேச சந்தையில் தொழில் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

சர்வதேச தகவல் தொடர்புகளை உள்ளடக்கிய அமைப்புக்களோடு இணைந்துதான் இந்தக் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்கா டொலரின் மூலம் ஊருக்குள் பெருந் தொகையிலான வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பிள்ளைக்கு சுமார் ரூபா 500 அமெரிக்க டொலர் சம்பளம் கிடைக்குமாயின் ஒரு மில்லியன் ரூபா அமெரிக்க டொலர் வருமானத்தை எமது பிரதேசத்திலுள்ள 100 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே எமது பிள்ளைகள் நேரத்தை விணாக்காது கற்கை நெறியில் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி உரையாற்றுகையில்;

செயற்கை நுண்ணறிவு கிராமத்தின் தலைவர் தொழிலதிபர் நவாஸ் ஹாஜியாரைப் பொறுத்தவரையில் தகவல் தொழில் நுட்பத் துறையில் மிகுந்த நாட்டம் உடையவர் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1976 இல் இந்த நாட்டில் தகவல் தொழில் நுட்பம் பற்றி யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் நவாஸ் ஹாஜியார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஒரு விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். இவருக்கு இதன் பெறுமதி என்ன, பயன்பாடுகள் என்ன என்பது நன்கு தெரியும். தன் தந்தையும் தானும் கற்ற பாடசாலைக்கும் தம் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கணினி தொழில்நுட்பக் கல்வியை வழங்கியமை மனதிற்கு சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் 50ஆவது முஸ்லிம் மஜ்லிஸின் ஆண்டு தினத்தை முன்னிட்டு பாடசாலையில் மாணவர்களின் பெரிய கலை கலாசார விழா இடம்பெற்றது. அதற்கு என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தார்கள். அது என்னுடைய வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் நான் கற்ற பாடசாலைக்குச் செல்வது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

நவாஸ் ஹாஜியார் தன்னுடைய நீண்ட கனவை நனவாக்குவதற்கு தன்னுடைய ஊரையும் பாடசாலையினையும் தெரிவு செய்து ஒரு முன்மாதிரியான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளமையினை இட்டு நாம் எல்லோரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு கிராமம் ஈமானையும் இறையச்சத்தையும் கடைப்பிடித்தால் நாம் வாழும் பூமியினுடைய அருள் இறைவனால் திறந்து விடப்படும். நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரை ஒரு முன்மாதிரிமிக்க நகரமாக மாற்றினார்கள். மதீனாவில் உருவாக்கப்பட்ட வடிவமைப்பை போன்று வேறு எந்த உலக நாட்டிலும் உருவாக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறையச்சமிக்க ஒரு முன்மாதிரியான நகரத்தை உருவாக்குவதில் அதிலும் பன்முக கலாசாரம், பன்முக மொழி, பன்முக வகுப்புக்கள் உள்ள மக்களை உருவாக்குவதில்தான் நபி (ஸல்) அவர்களுடைய திட்டங்கள் இருந்தன.

வீரமந்திரி எழுதிய புத்தகத்தை நாம் எல்லோரும் வாசிக்க வேண்டும். அப்புத்தகத்தின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கு நவாஸ் ஹாஜியார் பங்களிப்புச் செய்துள்ளார். எமது முஸ்லிம் புத்திஜீவிகள் செய்யாத பங்களிப்பை அவர் எமது முஸ்லிம் சமூகத்திற்குச் செய்துள்ளார். அவர் எமது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை விருது வழங்கி கௌரவித்துள்ளது. மக்களை மதிப்பது நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் ஆகும்.

இப்பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டடத்தை வழங்கவுள்ளதாக நவாஸ் ஹாஜியார் கூறினார்கள். உண்மையிலே இப்படியான நல்ல காரியங்களைச் செய்பவர்களுக்குத்தான் அல்லாஹ் மென்மேலும் பரக்கத்துகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றான். அவர் கல்விக்காக ஆற்றுகின்ற பணி அளப்பரியது, பாராட்டத்தக்கது.

ஒரு கிராமத்தை முன்னேற்ற வேண்டும் என்றால் முதலில் அதன் தகவல்களைத் திரட்ட வேண்டும். ஊரில் எத்தனை விதவைகள், எத்தனை அநாதைப் பிள்ளைகள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது தெரியாமல் செய்ய முடியாது. அதற்கான பயிற்சிகளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வழங்கி வருகின்றது. உலமாக்கள் இந்தியாவுக்குச் சென்று செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளை பெற்று வந்துள்ளார்கள். மக்தப் பாடநெறிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் மக்தப் மாணவர்களினால் மிகவும் முன்மாதிரியான கண்காட்சியினை ஒழுங்கு செய்திருந்தார்கள். அதில் இஸ்லாமிய பாரம்பரிய கலை கலாசார அம்சங்களுடன் கூடிய விடயங்கள் பிள்ளைகளினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் ஷெய்க் ரிஸ்வி முப்தி இதன்போது ஞாபகப்படுத்தினார்.

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சாமிலா தாவூத் உரையாற்றும் போது;

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அக்குறணையிலாகும். இந்த இடத்திற்கு வந்த சமயம் என்னுடைய பாடசாலைக் காலம் என்ன மாதிரி அமைந்தது என்பது பற்றி பழைய நினைவலைகளை நான் மீட்டிப் பார்த்தேன். அக்குறணையில் நவாஸ் ஹாஜியார் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அக்குறணை சாஹிராக் கல்லூரிக்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்தார். நான் அங்கு பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலில் நவாஸ் ஹாஜியாருடைய உரையினைக் கேட்டேன். அவர் முதலில் அந்தப் பாடசாலைக்கு நூலகம் ஒன்றை நிர்மாணித்துத் தருகின்றேன் என்று கூறினார். அக்குறணையின் கல்வி வளர்ச்சிக்கு அவர் அன்று முதல் இற்றைவரைக்கும் ஆற்றி வருகின்ற அளப்பரிய சேவை எம்மால் மதிப்பீடு செய்ய முடியாது.

செயற்கை நுண்ணறிவுக் கிராமம் பற்றிச் சொல்வதானால் இங்குள்ள தனவந்தர்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயற்படுவார்களாயின் நிறைய சேவைகளை ஊரின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளலாம். அதற்கு ஒரு முன்மாதிரிமிக்க கிராமமாக மள்வானஹின்ன கிராமத்தை நான் பார்க்கின்றேன். இந்த கணினி தகவல் கற்கை நிலையத்தில் கல்வியினை மேற்கொள்வதற்காக 106 பிள்ளைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு பிள்ளைகளிடத்திலும் இருக்க வேண்டியது பண்பு திறந்த மனப்பாங்கும் சிறந்த சிந்தனையுமாகும். இப்படியான வசதியான வளங்கள் வழங்கப்படுமாக இருந்தால் இந்த வளத்தை என்னுடைய வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றேன். அதை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகின்றேன் என்பதுதான் திறந்த மனப்பாங்காகும். திறந்த மனப்பாங்கு இருந்தால் சிறந்த சிந்தனை இருக்கும். என்னென்ன இலவசமாக வழங்கப்படுகிறதோ அதில் நிறைய மதிப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவை இலவசமாகக் கிடைக்குமாயின் அதன் பெறுமதியை மறந்து விடுவோம். இலவசமாகப் பெற்றுக் கொண்டதை மீளவும் அதனை எந்த வகையில் திருப்பிக் கொடுக்க முடியுமோ அந்த வகையில் திரும்பிக் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் இந்த கற்கை நெறியினைத் திறம்படக் கற்று முடிக்க வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையில் எதையும் காலம் கடத்துவதற்காக மட்டும் நினைக்க வேண்டாம். கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை மல்வானஹின்னை என்ற ஊரைத் தாண்டிச் செல்லும் போது எனது பார்வையில் ஊர் மிகவும் சுத்தாகவும் மிகவும் ரம்மியமாகவும் இருக்கின்ற காட்சி தோன்றியது. அப்பொழுது செயற்கை நுண்ணறிவுக் கிராமம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று தெரியாது. ஆனால் அக்குறணைக்குள் இந்த ஊர் வித்தியாசமாக இருக்கிறது என்பது மட்டும் புலப்பட்டது. ஆனால் வித்தியாசம் மிகத்துல்லியமாகத் தெரிந்தது. நிறையப் பேர் கதைப்பார்கள் நடைமுறையில் ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால்; அவர்கள் செயற்படுவதைப் பார்க்கின்ற போது தான் மாற்றம் தெரியும். இதில் நானும் ஒர் அங்கத்தராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சிடைகின்றேன். இதுதான் நாங்களும் படிப்பது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக சுற்றுலா மற்றும் முகாமைத்துறைப் பேராசிரியர் அஸ்லம் உரையாற்றுகையில்;

மள்வானஹின்ன என்ற ஊருக்கு இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். உலகத்தில் முக்கியமானது ஒன்றுதான் உருவாக்குதல் ஆகும். எந்த ஒரு விடயமும் எங்கு உருவாக்கப்படுகிறதோ அந்த விடயம்தான் உலகத்திற்கு புத்துயிர் கொடுக்கும். இதுதான் நாம் உலகில் காணும் உண்மை. உலகத்தில் ஒன்றை உருவாக்குவதுதான் மிகவும் கடினமானதும் முக்கியமானதும் ஆகும்.

ஆகவே அந்த வகையில் இலங்கையில் மள்வானஹின்னை ஒரு முக்கியமான கிராமமாக எதிர்காலத்தில் திகழும். செயற்கை நுண்ணறிவுக் கிராமம் உருவாவது என்றால் அது மள்வானஹின்ன கிராமமாகத்தான் இருக்கும். இந்த மல்வானஹின்னைக் கிராமத்தைப் பார்த்து அடுத்த மனிதர்கள் தங்களுடைய கிராமத்தையும் உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்தல் வேண்டும்.

கணினி தொழில் நுட்பத்தின் மூலம் இந்த கிராமத்தின் மாணவர் சமூகம் முழு பயனையும் அடைவதைப் போல ஏனைய கிராமங்களைச் சார்ந்தவர்கள் பயன்களை அடைய வேண்டும். செயற்கை நுண்ணறிவுக் கிராமம் என்று கூறும் போது இலங்கையில் முதன் முதலில் மள்வானஹின்ன பேசப்படும் கிராமமாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன். இந்த திட்டம் முழுமையானதாக நிறைவேறி உலகத்திற்கு முன்மாதிரியாக வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT