Tuesday, April 23, 2024
Home » முஹம்மத் (ஸல்) மனிதநேயத்தின் முன்மாதிரி

முஹம்மத் (ஸல்) மனிதநேயத்தின் முன்மாதிரி

by sachintha
November 17, 2023 6:49 am 0 comment

‘அகிலத்தார்க்கு ஒரு அருட்கொடையாக’ (அல் குர்ஆன் 21:107) முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்வையகத்திற்கு வந்துதித்தார்கள். அறியாமையில் மூழ்கி நல்லது எது? கெட்டது எதுவென்று? தெரியாது கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் கொலை, கொள்ளை, களவு, குடி, சூது, விபசாரம் என மனிதனால் மட்டுமன்றி அல்லாஹ்வினாலும் விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்களை அன்னார் அதிலிருந்து மீட்டெடுத்தார்கள். அத்தோடு அவர்களை மனிதப் புனிதர்களாகவும் உருவாக்கினார்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும், உன்னதமான புனித இஸ்லாத்தை உலகிற்கு கொண்டு ​செல்ல வேண்டும் என்பதற்காகவும் தன் உயிரையே துச்சமென மதித்து உறவுகளையும் உடமைகளையும் மாத்திரமல்லாமல் பிறந்த சொந்த மண்ணையே விட்டு இடம்பெயர்ந்த தியாகச் செம்மல்தான் நபி (ஸல்) அவர்களாவர். அன்னார் வாழ்வில் பட்ட துன்ப, துயரங்கள் சொல்லிலடங்காது. என்றாலும் நபி (ஸல்) அவர்களிடம் பொறுமை, சகிப்புத் தன்மை, தியாக மனப்பான்மை, மற்றவரை மதித்தல், கண்ணியங் கொடுத்தல், விட்டுக் கொடுத்தல், நம்பிக்கை, உண்மையில் உறுதியாக இருத்தல் உள்ளிட்ட சகல விடயங்களும் ஒருமித்துக் காணப்பட்டன. அவற்றின் ஊடாக அன்னார் முழு உலகிற்கும் முன்மாதிரியாகத் திகழுகின்றார்கள். ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபுஉதாபியீன்கள் அடங்கலாக இறைவிசுவாசிகள் அனைவரும் அவரையே முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வை ஒழுங்கமைத்துக் கொண்டனர். அன்னாரது போதனைகளை முஸ்லிம்கள் ஏற்று நடக்கின்றனர்.

அல்லாஹ்வின் உண்மையான அடியானாகவும், அல்லாஹ்விற்கு உகப்பான முதல் மனிதராகவும் நபி (ஸல்) அவர்கள் விளங்கியுள்ளார்கள். அதற்கு அன்னாரின் வாழ்வொழுங்கே நல்ல எடுத்துக்காட்டாகும்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையும் அன்னாரின் மனிதநேய பண்புகளையும் கண்டு மாற்றுமத சகோதரர்கள் கூட அவர் உன்னதமான மாமனிதர் என்கின்றனர். மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதை செயலுருப்படுத்திக் காட்டியவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் என்றால் அது மிகையாகாது.

இவ்வாறான உன்னதப் பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அடியான் மீதும் அபார பாசமுள்ளவராக இருந்தார்கள். தனது உம்மத்தின் மீது கொண்ட அன்பு, கருணை காரணமாக தனது மரணத் தருவாயிலும்கூட அவர் அனுபவித்த வேதனையின் தாக்கத்தினையும், அதன் தன்மையையும் கண்டு எந்தவொரு மனிதனாலும் சிறிதளவேனும் சிந்தித்துச் செய்ய முடியாத காரியமொன்றைச் செய்தார்கள். அதுதான் மரண வேதனையை யதார்த்தமாக உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், அதன் தாக்கத்தினை தனது உம்மத்தினர் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்றெண்ணி அந்த வேதனையை எனது உம்மத்திற்கு கொடுத்திராது அதனை எனக்கே தந்துவிடு என்று அல்லாஹ்விடம் இரஞ்சி பிரார்த்தனை செய்துள்ளார்கள் (ஆதாரம்- நபிமொழி). அந்தளவிற்கு தனது உம்மத்தின் மீது அன்னார் அன்பு கருணை கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளையும் பின்பற்றும் எந்தவொரு மனிதனும் வழி தவறிப்போனதில்லை என்பதே இஸ்லாத்தின் வரையறைகளாகும். (ஆதாரம்-: முஸ்லிம்)

ஒரு மனிதன் இவ்வுலகிலும், மறுவுலகிலும் சிறப்பான பேறு பெற்றவனாக ஆக வேண்டுமானால் அல்லாஹ்வினதும், நபியவர்களினதும் வழி முறைகளை பின்பற்றுவதிலேதான் தங்கியுள்ளது எனலாம்.

சத்தார் எம்.ஜாவித்-… பிரதான முகாமைத்துவ அலுவலர்,

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT