Tuesday, April 23, 2024
Home » 15 வருடங்களுக்கு மேலாக 13 அரசியல் கைதிகள் சிறையில்

15 வருடங்களுக்கு மேலாக 13 அரசியல் கைதிகள் சிறையில்

by sachintha
November 17, 2023 6:20 am 0 comment

கருணை அடிப்படையில் விடுவிக்க சார்ள்ஸ் MP கோரிக்கை

அரசியல் கைதிகளாக 15 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 13 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி 13 பேருக்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவசரமாக வழங்கப்பட்ட தீர்ப்புக்களை, மீள் பரிசீலனை செய்து அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

அவர்களை பிணையில் விடுவிப்பதானால், பிணை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான நாம், தயாராகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

நாட்டில் யுத்தம் நடைபெற்றபோது இளைஞர் ,யுவதிகள் கைது செய்யப்பட்டனர்.2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. நான் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றம் வந்தபோது 217 அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இன்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 15 வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாக 13 அரசியல் கைதிகள் சிறைகளில் உள்ளனர்.

ஏனையோர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்போது அரசியல் கைதிகளாகவுள்ள இந்த 13 போரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு, அரசாங்கமும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக நீதிமன்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் 8 பேர் இருக்கின்றனர். மூவர் விளக்கமறியலில் உள்ளனர்.2 பேர் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர். தும்பறை சிறையில் உள்ள அரசியல் கைதிக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு 22 ஆயுள் தண்டனைகள்.14x 22+14 வருடங்கள் ஒரு மனிதனால் இந்தளவு ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க முடியுமா?

அதேபோன்று ஆனந்த சுதாகரன் என்ற அரசியல் கைதிக்கு 93 வருட ஆயுள் தண்டனைகள்.அதாவது 93×14+10 வருடங்கள் .

அதேபோன்று பார்த்திபன் ,சிவகுமார் என்ற இரண்டு அரசியல் கைதிகளுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 10 வருட சிறைத் தண்டனையுமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் 28 வருடங்களாக சிறையில் இருக்கின்றார்கள் .அவர்களுக்குரிய தண்டனைக்காலம் முடிவடைந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT