Wednesday, April 24, 2024
Home » 100 அத்தியாவசிய மருந்துகளுக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை

100 அத்தியாவசிய மருந்துகளுக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை

-சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரன பாராளுமன்றில் தெரிவிப்பு

by sachintha
November 17, 2023 6:56 am 0 comment

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் சம்பந்தமான 100 மருந்துகளுக்கு ஏற்கனவே விலைக்கட்டுப்பாடு விதிப்பு

100 அத்தியாவசிய மருந்துகளுக்கு மேலும் விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில், விலை தொடர்பான அதிகார சபைக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளை, ஜயந்த சமரவீர எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜயந்த சமரவீர எம்பி தமது கேள்வியின் போது,

அமெரிக்க டொலரின் அதிகரிப்போடு நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் மூன்று மடங்கிலிருந்து ஆறு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகின்றன . சில மருந்துகளின் விலை 600 ரூபாவால் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மருந்துகளின் விலை அதிகரிப்பையாவது கட்டுப்படுத்த முடியாதா? அதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் மேற்கொள்ள முடியாதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன,

தற்போதும் நாட்டில் விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நூறு மருந்து வகைகள் காணப்படுகின்றன. சந்தையில் காணப்படும் நீரழிவுக்கு எதிரான, உயர் இரத்த அழுத்தத்துக்கு எதிரான மற்றும் இதயம் சம்பந்தமான மருந்துகள் உள்ளிட்ட 50 வகை மருந்தும் அதற்குள் உள்ளடங்குகின்றன. அவை அனைத்தும் பிரதான மருந்து வகைகள் பட்டியலைச் சேர்ந்தவை.

இவைகளுக்கு விலைக் கட்டுப்பாடு மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகார சபையே. அதற்கே விலைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் உள்ளது. எதிர்காலத்தில் மேலும் 100 மருந்துகளுக்காகவாவது விலைக் கட்டுப்பாட்டை கொண்டு வருவதே எமது எதிர்பார்ப்பு. இதற்காக மேற்படி விலைகள் தொடர்பான குழு, சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

இதற்கான தலைவரும் அண்மையிலேயே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தலைவருடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவ்வாறு 100 மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதனை வர்த்தமானியில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஒரே மருந்துக்கு சுமார் 10 வரையான வர்த்தக பெயர்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT