12 மணிக்கு முதல் பணி திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர் | தினகரன்

12 மணிக்கு முதல் பணி திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர்

12 மணிக்கு முதல் பணி திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர்-Railway Technical Service Strike

 

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள, புகையிரத சேவையின், சாதாரண, ஒப்பந்த, நியமன அடிப்படையிலான தொழில்நுட்ப சேவை ஊழியர்கள், இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு திரும்புமாறு கோரப்பட்டுள்ளனர்.

புகையிரத திணைக்களத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு பணிக்கு திரும்பாதோர், பணியிலிருந்து தாமே விலகியதாக கருதப்படுவர் என திணைக்களம் அறிவித்துள்ளது.

தமது சம்பளத்தை 12.1% ஆல் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று முன்தினம் (29) பிற்பகல் 4.00 மணி முதல், புகையிரத சேவையின் தொழில்நுட்ப சேவை ஊழியர்கள், 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பணிப் புறக்கணிப்பு காரணமாக கடந்த இரு நாட்களாக புகையிரத சேவைகள் பல தாமதமாக புறப்பட்டதோடு, இதனால் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 48 மணி நேர குறித்த பணிப் புறக்கணிப்பை இன்று பிற்பகல் 4.00 மணி வரை நிறைவுக்கு கொண்டு வரவுள்ள நிலையில், இத்தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா என்பது குறித்து, இன்று (31) இடம்பெறவுள்ள தமது சங்கத்தின் கூட்டத்தை தொடர்ந்து முடிவெடுக்கவுள்ளதாக, புகையிரத தொழில்நுட்ப சேவை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், குறித்த பணிப் புறக்கணிப்பு காரணமாக, புகையிரத ஓடுபாதை மேடை, சமிக்ஞை தொகுதி சோதனைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


Add new comment

Or log in with...