வட மாகாண கல்வியமைச்சருக்கு TID அழைப்பாணை | தினகரன்

வட மாகாண கல்வியமைச்சருக்கு TID அழைப்பாணை

வட மாகாண கல்வியமைச்சர் க. சர்வேஸ்வரனுக்கு TID அழைப்பாணை-NPC Minister K Sarveswaran Summon to TID

 

- முகவரியற்ற அழைப்பை மறுத்த வ.மா. அமைச்சர் க. சர்வேஸ்வரன்

வட மாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனைக் கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள நான்காம் மாடிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த அழைப்பைக் கல்வியமைச்சர் நிராகரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (29) பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர் வருகை தந்தனர். அவர்கள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க. பரமேஸ்வரனை எதிர்வரும் ஜூன் 05 ஆம் திகதி கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தர அழைக்கும் அழைப்பாணையுடன் வந்துள்ளதாகத்  தெரிவித்துள்ளனர்.

ஆயினும் க. பரமேஸ்வரன் என எவருமில்லையெனத் தெரிவித்த அமைச்சின் அதிகாரிகள் கல்விப்  பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனைச் சந்திக்க அவர்களிற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, எவரது ஒப்பமும் அற்ற வெறுமனே கைகளால் எழுதப்பட்டு யாரால் எழுதப்பட்டது? அல்லது யாருக்கு எழுதப்பட்டது? என்ற எந்தவொரு தகவலுமற்றதாக போட்டோப் பிரதி எடுக்கப்பட்ட ஆவணமொன்றைக் கையளித்த அவர்கள் விசாரணையொன்றிற்காகக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை கொழும்புக் காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனினும் மொட்டைக்கடிதப் பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை ஏற்க மறுத்த வடக்கு மாகாணக் கல்வியமைச்சர் எதிர்வரும் ஜூன் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாணக் கல்வி அமைச்சரிடமே மொட்டைக்கடித அழைப்பாணையுடன் வருகை தரும் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் சாதாரண பொதுமக்களை எவ்வாறு கையாளுவர்? என்பது குறித்து தனக்குச் சந்தேகமிருப்பதாகவும் கலாநிதி க. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பிரிவினர் சட்டரீதியாக உத்தியோகபூர்வமாகக் கடிதங்களைக் கையாளாமல் மொட்டைக்கடிதப் பாணியில் அனுப்பிவைப்பது எதற்காக? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

(செல்வநாயகம் ரவிசாந்)

 


Add new comment

Or log in with...