டிரம்ப் − கிம் சந்திப்பை நடத்துவதற்கு புதிய திருப்பம் | தினகரன்

டிரம்ப் − கிம் சந்திப்பை நடத்துவதற்கு புதிய திருப்பம்

 

வட, தென் கொரிய தலைவர்கள் திடீர் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சிங்கப்பூரில் சந்திப்பதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜொன் உன் உறுதியான விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.  

இந்த உச்சிமாநாட்டை ரத்துச் செய்யும் அறிவிப்பை டிரம்ப் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டபோதும், வட கொரியாவிடம் இருந்து சாதகமான செய்திகள் வந்ததை அடுத்து அந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.  

இந்நிலையில் ஜுன் 12 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் எந்த மாற்றமும் இல்லை என்று சனிக்கிழமை பின்னேரம் டிரம்ப் மீண்டும் குறிப்பிட்டார்.  

மறுபுறம் வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு இணங்கி இருப்பதாக வட கொரியாவின் ஏ.சி.என்.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் கடந்த சனிக்கிழமை எதிர்பாராத சந்திப்பொன்றை நடத்தியதை அடுத்தே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.  

இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு மணி நேர பேச்சுவார்த்தையில் நேர்மையான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் குறிப்பிட்்டுள்ளார்.  

இரு கொரியாக்களுக்கும் இடையில் இரு நாட்டு எல்லையில் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பாக இது இருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்க மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் இரு கொரிய தலைவர்களும் வரும் வெள்ளிக்கிழமை மேலும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்பட்டபோதும் அது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.  

இதனிடையே, முன்பே திட்டமிட்டபடி ஜுன் 12ஆம் திகதி சிங்கப்புூரில் உச்சிமாநாடு நடைபெற ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருவதாக வொஷிங்கடனில் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். 

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில், “கிம் ஜொங் உன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே, ஜூன் 12ஆம் திகதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த திகதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார். 

வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா வலியுத்துகிறது.  

வட கொரியா கடந்த 2006 தொடக்கம் ஆறு அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டிருப்பதோடு பல பல்லிஸ்டிக் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்பட்டபோதும் நிபுணர்கள் அது பற்றி சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  

2006 தொடக்கம் பல சுற்று சர்வதேச தடைகளுக்கு முகம்கொடுத்திருக்கும் வட கொரியா, அதன் பெரும்பாலான ஏற்றுமதிகளை மேற்கொள்ள முடியாமலும் எண்ணெய் இறக்குமதியை செய்ய முடியாமலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த பொருளாதார அழுத்தமே வட கொரிய தலைவர் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வழி ஏற்படுத்தி இருப்பதாக அவதானிகள் நம்புகின்றனர்.

 


Add new comment

Or log in with...