பொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம் | தினகரன்

பொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்

'திரு' என்று அழைக்கப்படுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக ஆளுமை கொண்டவர்.

வடமராட்சி கரவெட்டியில் கரணவாய் கிராமமே அவர் பிறந்த இடம். திரு பிறந்த டிசம்பர் முதலாம் திகதி நினைவைவிட்டு அகலாத ஒரு தினம். சைவத்தையும் தமிழையும் வளர்க்கப் பாடுபட்ட நல்லைநகர் ஆறுமுகநாவலரின் குரு பூஜை அன்றைய தினத்தில் ஆகும்.

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லாரியின் நூற்றாண்டு நிறைவு தினம் (6 ஒக்டோபர் 2017 ) தொடர்பாக திருவுடன் ஒரு தடவை உரையாடிக் கொண்டிருந்தபோது அவரது 80 வது பிறந்ததினத்தில் அவரின் அருமை பெருமைகளைப்பற்றி ஒரு கட்டுரை எழுதப் போவதாகக் கூறியிருந்தேன். அவருக்கு பெருமகிழ்ச்சி. ஆனால், 80 வது பிறந்ததினம் வருவதற்கு முன்னதாகவே அவர் பிரிந்துவிட்டார்.

எஸ்.எஸ்.சி.வரை நாங்கள் இருவரும் முன்னணி ஆங்கிலப் பாடசாலையான விக்னேஸ்வரா கல்லூரியில் கற்றோம். சமூக வாழ்வின் சகலதுறைகளிலும் தலைசிறந்த ஆளுமைகளைத் தோற்றுவித்த கல்லாரி அது. உலகப்புகழ் பெற்ற சான்றோரையெல்லாம் உருவாக்கிய பாடசாலை.

தனது இரண்டாம் நிலைக்கல்வியை விக்னேஸ்வராவில் முடித்துக்கொண்ட பிறகு வீரகேசரி பத்திரிகையில் திரு உதவி ஆசிரியராக பணியாற்ற ஆரம்பித்தார். அடுத்து அவர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து நாளடைவில் நிறைவேற்று ஆளணி அதிகாரியாகப் பதவி உயர்ந்தார். காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் அவர் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, கட்டுரை மொழிபெயர்ப்பாளராக பல்வேறு பகுதிநேரப் பணிகளையும் செய்தார்.

ஊடகத்துறையில் திருவுக்கு இருந்த இயல்பான ஈடுபாடு காரணமாக பிறகு இலங்கை வானொலியில் நிரந்தரமாகச் சேர்ந்து கொண்டார். அங்கு அவர் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகவும் பணியாற்றிய பின்னர் மேலும் பெரிய பதவிகளை அடைந்தார். இலங்கை வானொலி நாளடைவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. அதில் திரு பிரதிப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். பொறுமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புச் சிந்தனையுடனான சேவை ஆகியவற்றுடன் சேர்ந்து இன்முகமும்தான் திருவுக்கு இந்த உச்சங்களைக் கொடுத்தன.

திருவுடனான எனது தொடர்பு விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்புக்கிளை அங்குரார்ப்பணத்துடனேயே தொடங்கியது. அதற்குப் பிறகு அக்குழுவின் மாதாந்தக் கூட்டங்களில் பங்குபற்ற திரு கிரமமாக வருவார்.அதிலிருந்தே எனக்கும் அவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்படத்தொடங்கியது.

எமது பழைய மாணவர்கள் சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவை (1992 - 2002 ) முன்னிட்டு 10 ஓகஸ்ட் 2002 வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் 'பத்தாண்டு காலம்' என்ற தலைப்பிலான மலரும் வெளியிடப்பட்டது.அதன் வெளியீட்டு ஆசிரியரும் திருவே.

எம்.சிவசிதம்பரம் நினைவுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நினைவுப்பேருரை நிகழ்த்தினார். அப்போது வெளியிடப்பட்ட 'சாகாவரம் பெற்ற சான்றோன்' என்ற தலைப்பிலான நினைவு மலரின் வெளியீட்டு ஆசிரியராகவும் திரு பணியாற்றினார்.அந்த மலருக்காக அரசியல் தலைவர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை பலதுறைகளையும் சார்ந்த முக்கியஸ்தர்களிடமிருந்து சிவசிதம்பரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் கட்டுரைகளைப் பெறுவதில் திரு ஆற்றிய பங்களிப்பு மெச்சத்தக்கது.

இது தவிர, 2011 ஆம் ஆண்டில் நாம் வெளியிட்ட பேராசிரியர் சிவத்தம்பி பற்றிய கட்டுரைகள் அடங்கிய இன்னொரு நூலின் வெளியீட்டு ஆசிரியராக திரு செயற்பட்டார். இந்த நூல்களையெல்லாம் தயாரிக்கும் பணிகளை திரு வேறு எவரினதும் உதவியின்றி தன்னந்தனியனாக செய்தார்.

ஊடகத்துறையின் முப்பரிமாணங்களில் அதாவது, பத்திரிகை, ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் அவருக்கு நிறைந்த அனுபவமும் அறிவும் இருந்ததால் அத்தகைய நூல் ஒன்று இன்றைய இளம் ஊடகவியலாளர்களுக்காக எழுதுவது பயனுடையதாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அந்த நூலை வெளியிடும் பணியை திருவினால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

எமது சங்கத்தின் செயலாளராக 17 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய திரு அதன் செயற்பாடுகளின் உந்துசக்தியாக விளங்கினார். நான் 25 வருடங்களாக தொடர்ச்சியாக தலைவராக இருந்தேன். திரு எம்முடன் செயற்பட்டபோது எமக்கு ஒரு பலமாகத் திகழ்ந்தார்.

அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வளமான அறிவைக் கொண்டவர். சிங்கள மொழியும் கூட அவருக்கு நன்றாகத் தெரியும்.காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தனக்கு தமிழ் போதிக்க பொருத்தமான ஆளைத் தந்துதவுமாறு என்னைக் கேட்டபோது உடனடியாகவே நான் திருவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.அமைச்சருக்குத் தமிழ் கற்பிக்கும் பணியை கச்சிதமாக அவர் செய்தார்.அதனால் பெரிதும் திருப்தியடைந்த அமைச்சர் தனது பொதுத் தொடர்பு அதிகாரியாகத் திருவை நியமித்தார்.

திருவின் ஒழுங்கமைக்கும் திறன் மற்றும் அர்ப்பணிப்புடனான செயலூக்கம் காரணமாக அவர் முன்னெடுத்த கைங்கரியங்கள் எல்லாமே பிரகாசித்தன.

வே. விமலராஜா
(ஓய்வுபெற்ற தொழில்
நீதிமன்ற நீதிபதி, தலைவர்,
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்
சங்க கொழும்புக் கிளை,
சிட்னி, அவுஸ்திரேலியா)


Add new comment

Or log in with...