தடைக் கற்கள் நீக்கப்படவேண்டும் | தினகரன்

தடைக் கற்கள் நீக்கப்படவேண்டும்

 

இயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த சீரற்ற காலம் மாத இறுதிவரை தொடரலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்பட்டபோதிலும் அச்ச சூழ்நிலை தொடர்வதால் ஒரு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். மழை தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில் போன்றே இம்முறை வெள்ளமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இடி, மின்னல் தாக்கம் குறித்தே மக்கள் மிக விழிப்புடனிருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை அடை மழை, வெள்ளம் காரணமாக இரத்தினபுரி, கம்பஹா, புத்தளம், களுத்துறை, காலி, கொழும்பு மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 42973 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 28328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களை அடிக்கடி எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆண்டு தோறும் நாடு இயற்கை அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தவண்ணமே உள்ளது.

மழை, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்படக்கூடிய மக்களை பராமரிக்கவும், உதவிகளை வழங்கி மீள் எழச் செய்வதற்குமான பொதுப் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய கடப்பாட்டை அரசு கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விடயத்தில் அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள் மந்த கதியிலேயே காணப்படுகின்றது. அரசாங்கம் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட போதிலும் அதிகாரிகள் மட்டத்தில் அசமந்த போக்கே தொடர்கிறது.

2016ல் இடம்பெற்ற பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுமென அரசு அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் சில இடங்களில் அந்த உதவி உரியவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு காணப்படுகின்றது. இந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவேண்டும். அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் அதிகாரிகள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ச்சியாக மழை வெள்ளம காரணமாக பாதிக்கப்படுவது குறிப்பிட்ட முக்கிய பிரதேசங்களாகும். மலையகம், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களே தொடர்ந்து இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் பகுதிகளாகும். இப்பகுதிகளில் அனர்த்தம் ஏற்படாதவாறு தடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுவது மிக முக்கியமானதாகும். இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

அரசு இயற்கை அழிவுகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக நீ்ண்டகாலத் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த வேண்டும். இது விடயத்தில் கொள்கைத் திட்டம் வகுக்கப்படாமல் அனர்த்தங்கள் ஏற்படும்போது மட்டும் உதவி, நிவாரணம் என்று வழங்குவதால் தீர்வு ஏற்படப்போவதில்லை. மக்கள் காற்று, மழை, இடி மின்னல்களின்போது பீதிகொண்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். அடை மழை பெய்தால் நிச்சயம் வெள்ள அபாயம் ஏற்படத்தான் செய்யும். தாழ் நிலப்பகுதிகளில் தான் கூடுதல் வெள்ள அபாயம் ஏற்படுகின்றது. இது விடயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

களனி, களு, வளவை, கிங், நில்வலா கங்கைகளில் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. திக்கு பேகங்கை நீர்த்தேக்கம் வளவ கங்கை நீர்த்தேக்கம், லக்ஷ்பான நீர்த்தேக்கம் உள்ளிட்ட பிரதான கங்கைகளின் வான் கதவு இன்று திறந்து விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளம கரைபுரண்டோடுகிறது. சிலவேளைகளில் இரவு நேரங்களில் மக்கள் நித்திரையிலிருக்கும்போது கூட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துகொள்கின்றது. இதனால் பாரிய சேதங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும் முற்றுமுழுதான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாக அது அமையப்பெற்றதாகத் தெரியவில்லை. இலங்கை வருடா வருடம் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வரும் நாடு என்பதால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அதனுடன் தொடர்புடைய நிலையங்களின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதே சமயம் அனர்த்தங்களைப் பார்ப்பதற்காக செல்வோரில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆபத்துக்களில் சிக்குவது தவிர்க்க முடியாததாகும். எனவே வெள்ள அனர்த்தத்தை பார்க்க செல்வோர் விடயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பொலிஸார் இது விடயத்தில் சட்டத்தை இறுக்கமாக்கவேண்டும். தேவையற்ற பாதிப்புகளும், உயிரிழப்புகளும் கூட இதனால் ஏற்படுகின்றது. இது குறித்து மக்கள் விழிப்பூட்டப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவைப்படும் நிதியை நிதியமைச்சர் திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார். எனினும் அரசு உதவிகளோடு இதனை மட்டுப்படுத்த முடியாது. பரோபகாரிகள் தத்தமது பிரதேசங்களில் முடிந்தளவு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். மனிதாபிமான உதவிகளை இந்த ரமழான் காலத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவேண்டும். நிவாரணம் வழங்குவதில் இன, மத, மொழி பேதம் பார்க்கக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் சகலருக்கும் உதவுவோமாக. இது நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப உதவும் என்பது திண்ணம். 


Add new comment

Or log in with...