போதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் | தினகரன்

போதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அது நடைமுறையில் அமுலாகவில்லை.மது குடியைக் கெடுக்கும், உயிரைக் குடிக்கும் என்று செய்யப்பட்டு வரும் விளம்பரங்களால் எதுவித பயனும் ஏற்பட்டதாகத் தெரியவுமில்லை.

மதுவுக்கு மேலதிகமாகப் பல்வேறு போதைப் பொருட்களும் நாட்டில் பாவனையில் உள்ளதாக செய்திகள் நாள்தோறும் வெளிவருகின்றன.

கடல் மார்க்கமாகவும், விமானமார்க்கமாகவும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு போதைப்பொருட்கள் நாட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றன என்று அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. தினமும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதாகவும், போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்து சிறைப்படுத்தப்படுவதாகவும் தண்டனை விதிக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனாலும் எந்தவழியிலோ போதைப்பொருள் விற்பனையும், பாவிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. போதைப்பொருள் பெருமளவில் கைப்பற்றப்படும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

போதைப்பொருள் வியாபாரத்தில் உள்ள அபாயங்கள், பாதுகாப்பின்மையைக் கவனத்தில் கொள்ளாது பலர் அதில் ஈடுபடுகின்றார்களென்றால் அதில் பெறப்படும் அதிகவருமானமே அதற்குக் காரணமெனக் கூறப்படுகின்றது. அதாவது நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளி அழிவுக்கு அதாவது உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் கொடிய நச்சு வியாபாரம் அதிக வருமானத்திற்காக பலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியிலும் போதைப்பொருட்கள் புகுத்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. திரவமாக, தூளாக, மாத்திரைகளாக பல வடிவங்களில் போதைப்பொருட்கள் பாடசாலைகள் பலவற்றுக்குப் பக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு ெபாலிஸ் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்று வாழ்க்கையில் உயர வேண்டிய, எதிர்காலத்தில் நாட்டின் பெறுமதிமிக்க குடிமக்களாக வளம்பெற வேண்டிய சமுதாயத்தைச் சீரழிக்கும் இப்போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டியது சமுதாய நலனில் ஆர்வம் கொண்ட அனைவரதும் கடமையாகும்.

இன்று சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவித்தோரும், விற்றவர்களும் பெருமளவில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது உண்மையானாலும் வெளியில் அகப்படாது தொடர்ந்தும் இத்தீச்செயலில் ஈடுபடுபவர்கள் பலர் உள்ளனர். இச்சமூகவிரோதிகளால் நாடு நாசமாகின்றது. வளரும் சமூகம் சீரழிகின்றது. குடும்பங்கள் குழப்பமடைகின்றன. ஏழ்மை பெருகுகின்றது. வறுமை ஏற்படுகின்றது. பிள்ளைகளின் கல்விக்காக, ஆரோக்கியத்திற்காக, ஏனைய தேவைகளுக்காகச் செலவிடப்பட வேண்டிய பணம் இழக்கப்படுகின்றது.

நாட்டிலே உடல் வலுவற்ற நோயாளர்கள் பெருகுகின்றனர். மக்களின் சிந்தனையாற்றல் மழுங்கடிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு நாட்டு நலனைப் பாதிக்கும் போதைப்பொருள் பாவனையை முற்றாகத் தடைசெய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்க அதிக கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டுக்குள் நடமாடும் போதைப் பொருள் வியாபாரிகளையும், பாவனையாளர்களையும் பற்றி பொலிஸ்துறைக்கும் அதுபோன்ற பொறுப்புள்ள தரப்பினருக்கும் அறிவிக்க வேண்டும். பிடித்துக் கொடுத்து தண்டனை பெற்றுக் கொடுக்கவும் உதவ வேண்டும். இது சமுதாயக் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கை மாறன்


Add new comment

Or log in with...