மியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை | தினகரன்

மியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை

மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது, ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100 இந்துக்களை படுகொலை செய்ததாக சர்வதேச மன்னிப்பு சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) குற்றம் சாட்டியுள்ளது.

ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். இவர்களுக்கும் அந்நாட்டின் சுதேச இனத்தவரான பெளத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. 'அரகன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆர்மி (ஏ.ஆர்.எஸ்.ஏ) என்ற பயங்கரவாத அமைப்பு ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏ.ஆர்.எஸ்.ஏ அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் பெரும் கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. சுமார் 7 இலட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறி, பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர். அங்கு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மியன்மார் இராணுவத்தின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் ஏ.ஆர்.எஸ்.ஏ பயங்கரவாத அமைப்புதான் கலவரத்துக்குக் காரணம் என மியன்மார் கூறி வந்தது.

இந்நிலையில், சர்வதேச மன்னிப்பு சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) கலவரம் நடந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து விசாரணை நடத்தியது. மேலும் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “கடந்த 2017 ஓகஸ்ட் 25-ம் திகதி ராக்கைன் மாகாணத்தின் வடக்கு மவுங்டாவுக்குட்பட்ட கா மவுங் சீக் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் மீது ஏ.ஆர்.எஸ்.ஏ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். குறிப்பாக ஆண், பெண், குழந்தைகள் என மொத்தம் 69 பேரை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களைக் கொடூரமாக தாக்கி உள்ளனர். இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். அதே நாளில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 46 இந்துக்கள் காணாமல் போய் உள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

(பிபிசி)


Add new comment

Or log in with...