எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை 55,000 பேர் முகாம்களில் தஞ்சம் | தினகரன்

எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை 55,000 பேர் முகாம்களில் தஞ்சம்

 

* உயிரிழப்பு − 13
* மீட்பு பணிகள் துரிதம்
* சமைத்த உணவு விநியோகம்

நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13 உயிரிழப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதுடன், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடத்தப்படும் நலன்புரி நிலையங்களில் 54 ஆயிரத்து 205 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள், வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளின் மேல் மாடிகளில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பத்தொன்பது மாவட்டங்களில் 32 ஆயிரத்து 136 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 831 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 205 பேர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஐவர் மின்னல் தாக்கியும், ஐந்து பேர் நீரில் மூழ்கியும், மண்மேடு சரிந்து ஒருவருமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இதன் முதலாவது தவணையாக 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்குகான நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கம் இதுவரை 54 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் சில நாட்களுக்கு தொடர்ந்தும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்தார். மேல், சப்ரகமுவ, வயம்ப மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளைகளிலும், ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 100 மில்லி மீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். கரையோரப் பகுதிகளில் குறிப்பாக காங்கேசன்துறை முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மழைவீழ்ச்சி காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் முதல் 70 கிலோமீற்றர் வரையில் காணப்படும் என்றும், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

களனி கங்கை, களு கங்கை, ஜிங் கங்கை, அத்தனகல்ல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டங்கள் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது. எனினும், சில பகுதிகளில் குறைந்த வெள்ள அபாயம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியான நிவாரணங்களை வழங்குமாறு அமைச்சர் துமிந்த திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் வெள்ள நிலவரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்றை அமைச்சர் நடத்தியிருந்தார். இதில் தேவையான உதவிகளை உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

களனி பிரதேச செயலகம் மற்றும் கொலன்னாவை பிரதேச செயலகம் ஆகியவற்றில் அமைச்சர் நேற்று அதிகாரிகளைச் சந்தித்திருந்தார். அது மாத்திரமன்றி ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நிவாரணங்களை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக தேவையான படகுகள் மற்றும் வள்ளங்களும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...