பாகிஸ்தான் படையினர் எல்லை கிராமங்களை நோக்கி தொடர் தாக்குதல் | தினகரன்

பாகிஸ்தான் படையினர் எல்லை கிராமங்களை நோக்கி தொடர் தாக்குதல்

76,000 பேர் இடம்பெயர்வு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் கொத்துக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

தாக்குதலையடுத்து எல்லையை அண்டிய 90 கிராமங்களில் இருந்து 76,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சர்வதேச எல்லையை ஒட்டிய இந்திய இராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் தொடர்ச்சியாக 9 நாள்கள் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு, கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். சம்பா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹிராநகர் பகுதியில் மூன்று பேர் காயமடைந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதேபோல் ஆர்.எஸ்.புராவில் ஒருவரும், அர்னியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அர்னியா நகரம் பாகிஸ்தான் படையினரின் தொடர் தாக்குதலில் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இது சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், அரசு முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

அர்னியாவைச் சுற்றிலும் ஏறத்தாழ 90 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசித்து வந்த பெரும்பாலான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிராமங்களில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 76,000 எனத் தெரியவந்துள்ளது.இடைவிடாத தாக்குதலால் அர்னியாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் அத்துமீறிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Add new comment

Or log in with...