தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உயிரிழப்பு 13ஆக உயர்வு | தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உயிரிழப்பு 13ஆக உயர்வு

தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தமிழகத்தை உலுக்கியுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்? துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையால் மீறப்பட்டுள்ள விதிகள் குறித்து தொடர்ந்து பல்வேறு கேள்விகள் அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் எழுப்பப்பட்டு வந்தன. இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்று ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்த நிலையில், தற்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நேன்று காலை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நான், துணை முதல்வர், ஸ்டாலின் மற்றும் கே.ஆர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றோம். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்டாலின் வெளியேறிவிட்டார். பின்னர் வெளியே வந்து முதல்வரை சந்திக்க முடியவில்லை எனக் கூறுகிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசியல் நாடகத்தை நடத்துகிறார். அரசியல் நாடகம் அரங்கேற்றவே எனது அறை முன் போராட்டம் நடத்தியுள்ளார். ஸ்டாலினைப் பார்க்க நான் மறுக்கவில்லை. கடந்த 2013-ம் ஆண்டே ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூடினார்.

இதன்பின் வழக்குப் போட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இயங்கி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஜெயலலிதா எடுத்த முயற்சியை தொடர்ந்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றுகூட ஸ்டெர்லைட் ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலைக்கு எதிராக வழக்குகளை சந்தித்து வருகிறோம். திட்டமிட்டு வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதனால்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசு சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து வருகிறது.

பழனிசாமி

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழப்பால் நாம் மன வேதனை அடைந்துள்ளோம். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என சில சமூக விரோதிகள் ஊடுருவி மக்களைப் போராட வைத்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 144 தடை உத்தரவு போடப்பட்டது. மக்கள் முதலில் சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். திட்டமிட்டு இந்தச் சம்பவம் நடைபெறவில்லை. தற்காப்புக்காகவே இந்தச் சம்பவம் நடைபெற்றது என்றார். 


Add new comment

Or log in with...