ஆலிம்நகர் மக்களின் முடிவற்ற போராட்டம்! | தினகரன்

ஆலிம்நகர் மக்களின் முடிவற்ற போராட்டம்!

 

காணிகளைப் பறிகொடுத்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலிம்நகர் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது அரசியல்வாதிகள் ஆசுவாசப்படுத்தினாலும் அவை நிரந்தரமான தீர்வொன்றுக்கு இட்டுச் செல்லவில்லை.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஆலிம்நகர். தற்போது 'அஷ்ரப் நகர்' என அழைக்கப்படுகிறது. இக்கிராம மக்கள் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

ஆலிம்நகர் கிராமத்தில், 1952ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மக்கள் வாழ்ந்துள்ளனர். இக்கிராமம் ஒரு ப​ைழமையான கிராமம். 1983 காலப்பகுதியில் இங்குள்ள மக்கள் யுத்தசூழலினால் இடம்பெயர்ந்தனர். அதன் பிற்பட்ட 1990 காலப் பகுதியில் 16 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனையடுத்து மக்கள் வெளியேறினர். ஆயினும் 1996ஆம் ஆண்டு இவர்கள் மீள்குடியேறினர்.

ஆலிம்சேனையானது, தீகவாபி கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது. ஆலிம்சேனையில் 120 குடும்பங்கள் உள்ளன. மொத்த சனத் தொகை 450 ஆகும்.

இக்கிராமத்தின் நிலங்கள், தொடர்ச்சியாக, அபகரிக்கப்பட்டும், ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டும் வருதாக மக்கள் கூறுகின்றனர்.

பெரும்பான்மை மக்களால் காணிகள் அபகரிக்கப்படுவதாக இம்மக்கள் கூறுகின்றனர். இன்னுமொருபுறம் தீகவாபி விகாரையை மையப்படுத்தியதாக புனித பூமி திட்டத்தில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. யானை பாதுகாப்பு வேலிக்காக வனவளத் திணைக்களத்தினர் ஆலிம்சேனை மக்களின் காணிகளை தம்வசப்படுத்திக் கொள்வதாகவும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இவ்வாறாக பல வழிகளிலும் இந்த மக்களின் காணிகள் பறிபோயுள்ளன.

இக்கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வனவள திணைக்கள உத்தியோகத்தர்களால், 130 ஏக்கர் காணியைச் சுற்றி யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த 130 ஏக்கர் காணிகளிலும் 69 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், யானைப் பாதுகாப்பு வேலிக்காக சுற்றி வளைக்கப்பட்ட குறித்த காணிகளுக்குள் வசித்த மக்களை வெளியேற்றி விட்டு, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ம் திகதி இராணுவம் வந்து முகாமிட்டுக் கொண்டது. அருகில் வாழ்ந்த மக்களும் அச்சம் காரணமாக தங்களுடைய காணிகளில் இருந்து வெளியேறினர். தங்கள் காணிகளுக்குள் மேற்கொண்ட விவசாயம், உப உணவுப் பயிர்செய்கைகளையும் அந்த மக்கள் கைவிட நேர்ந்தமையினால், தங்களின் வாழ்வாதராத்துக்கான தொழில்களையும் அவர்கள் இழந்தனர்.

இக்காணிகளுக்குள் இராணுவ முகாம் அமைத்த பின்னரும், மிஸ்பாஹ் என்பவர் மாத்திரம் தனது குடும்பத்துடன் இங்கு வாழ்ந்து வருகின்றார். அவரையும் வெளியேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த எந்த நடவடிக்கைக்கும் தான் அசைந்து கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றார் அவர்.

வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளுக்குள் இங்குள்ள மக்களில் பலர் வசிப்பதாகத் தெரிவித்து, ஏற்கனவே அவர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தினர் நீதிமன்றில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அதேபோன்று, தமது நிலத்துக்குள் செல்வதற்கு வனவளத் திணைக்களத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, ஆலிம்நகரிலுள்ள மக்களும் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த இரண்டு வகையான வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் பெரும்பாலானவை மக்களுக்கு சார்பாகவே அமைந்திருந்தன.

இவ்வாறு நீதித் துறையினூடாக கிடைக்கப் பெற்ற தீர்ப்பின் பின்னரும், தமது காணிகளுக்குச் செல்ல முடியாமல், இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்திருப்பதாக மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.

ஆலிம்சேனையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி முகாமில் ஏற்கனவே 200இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்ததனர். ஆனால் தற்போது 10இற்கும் குறைவான இராணுவத்தினரே எஞ்சியிருக்கின்றனர். ஆனால் பெரும் நிலப்பரப்பு அவர்களின் கட்டுப்பாட்டில் இன்னுமிருப்பதில் உள்ள மர்மம் புரியாதுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள விலைவாசி சூழலுக்குள்ள தாம் செய்த சொந்த தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் வருமானத்துக்கு அல்லல்படுவதாக கண்ணீருடன் கூறுகின்றனர்.

உப உணவுப்பயிர்செய்கை, வேளாண்மை விவசாயம் மேற்கொள்வதன் ஊடாக தத்தமது வாழ்க்கைச் செலவினை மிக இலகுவாக ஒழுங்கமைத்திருந்த மக்களின் இயல்புவாழ்வு இல்லாமல் போயுள்ளது.

ஆலிம்நகர் கிராமத்தில் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதானது அநீதியானது என்று மக்கள் கூறுகின்றனர்.நீதித்துறையால் வழங்கப்பட்ட தீர்பொன்றினை நடைமுறைப்படுத்த எந்தத் தரப்பும் இதுவரை முயற்சிக்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

ஆலிம்நகர் கிராமத்தை அண்டியே தீகவாபி கிராமம் உள்ளது. குறித்த கிராமத்துக்கு வணக்க வழிபாட்டுக்கு இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறான பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்த நிலையில், பல காலமாக வாழ்ந்துவரும் இந்த மக்கள் - தமது உளக்குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் அவ்வப்போது ஈடுபடுவர். அந்த வகையில் 2018.05.16ஆந் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தமது காணியில் உள்ள இராணுவ முகாமை அகற்றி, தமது காணியை மீள தம்மிடம் ஒப்படைக்கக் கோரியே, குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தங்கள் காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு 6 வருடங்கள் தாண்டியும், தமக்கான தீர்வுகள் எவையும் கிடைக்காமையினைக் கண்டித்தே இந்த மக்கள், மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

பல சுலோகங்களுடன் மக்கள் இக்கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.

அரசும் இங்குள்ள அரசியல்வாதிகளும் இக்காணி விடுவிப்பு விவகாரத்தில் அசமந்தம் காட்டுவதாக மக்கள் கண்டித்தனர்.

இங்குள்ள இராணுவ முகாமை அகற்றுவதன் மூலம், மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பக் கூடியதொரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

ஆலிம்நகர் காணி ஆக்கிரமிப்பு விவகாரம், இங்குள்ள அரசியல்வாதிகளின் அரசியல் ஆயுதம் என்றும் சொல்லப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் அரசியல் அரங்கில் இல்லாமல் போனால் அரசியல் களத்தில் அரசியல்வாதிகளுக்கு எதுவுமே இல்லாமல் போய்விடும். இந்த அச்சம் அரசியல்வாதிகளுக்கு இல்லாமலில்லை.

ஆலிம்நகர் மக்கள் தங்களது காணிகள் விடுவிப்புக்கு கடந்த 06வருடங்களுக்கு மேலாக பல முறை கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியுள்ளனர்.குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது துயர் விசாரிக்க எவரும் வரவில்லையென இம்மக்கள் கூறுகின்றனர்.

றிசாத் ஏ. காதர்
ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...