பாஜக தலைவரின் மகன் திடீர் மரணம் | தினகரன்

பாஜக தலைவரின் மகன் திடீர் மரணம்

 

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாரேயாவின் மகன் திடீரென மரணமடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதி பாஜக எம்.பி பண்டாரு தத்தாத்ரேயா. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர், கடந்த ஆண்டு பதவி விலகினார். ஹைதராபத்தில் உள்ள ராம்நகரில் வசித்து வருகிறார்.

இவரது மகன் பண்டாரு வைஷ்ணவ் (வயது 21) மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வைஷ்ணவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

21 வயதில் வைஷ்ணவ் மாரடைப்பால் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக நிர்வாகிகளும் அரசியல் கட்சியினரும் பண்டாரு தத்தாத்ரேயாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Add new comment

Or log in with...