தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தகவல் | தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூடு என்றால் விதிகளைப் பின்பற்றி என்னென்ன செய்திருக்க வேண்டும்? என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்?

ஒரு கலவரம் திடீரென உருவாவதில்லை. பல நாட்கள் அதன் கொதிநிலை அதிகரித்து ஏதோ ஒரு சின்ன சம்பவத்தில் அது கலவரமாக வெடிக்கும். இந்தக் கொதிநிலையை பொலிஸின் உளவுத்துறை தொடர்ந்து கண்காணிக்கும், அரசுக்கு அறிக்கையாக அனுப்பும். அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.

பல போராட்டங்கள் திறமையான காவல் அதிகாரிகளால் தந்திரமாகக் கையாளப்பட்டு அமைதியாக நடந்த வரலாறு உண்டு. நடைமுறை அறிவுகூட இல்லாமல் சிறிய போராட்டத்தையும் பெரும் கலவரமாக மாற்றி உயிரிழப்பு, சொத்து சேதம் ஏற்படக் காரணமாக அமைந்த சந்தர்ப்பமும் அமைந்தது உண்டு.

அப்படிப்பட்ட நிகழ்வுதான் தூத்துக்குடி சம்பவம். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே முடக்குவது ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட துப்பாக்கிச் சூட்டை இறுதிக்கட்டமாக அதுவும் குறிப்பிட்ட விதிகளின் கீழ்தான் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாரோ சில அதிகாரிகள் ஆத்திரத்தில் அப்போதுள்ள உணர்வுகளை வைத்து எடுப்பதல்ல துப்பாக்கிச் சூடு என்பது. அது அரசின் கொள்கை முடிவு என்று கூட சொல்லலாம். அதனால் தான் காவல் அதிகாரிகள் முடிவெடுக்காமல் ( சென்னை போன்ற இடங்கள் தவிர) ஆட்சியர்கள் முடிவெடுக்கிறார்கள்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக அனைவரும் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த விதத்தைப் பார்க்கும் போது, கமாண்டோ வீரர்கள், செல்ஃப் லோடிங் ரைபிள் எனப்படும் வகையான துப்பாக்கியை உபயோகப்படுத்தியுள்ளது இது முதல் முறை ஆகும். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது சில விதிமுறைகள் உள்ளன. அவை கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பொலிஸ் வேன் மீது ஏறிய கொமாண்டோ படை வீரர்கள் பொதுமக்களை இராணுவ வீரர்கள் போல் குறிவைத்து சுடுவது இதுவரை இல்லாத ஒன்று என பொலிஸ் அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.

பொய்ண்ட் 303 வகை துப்பாக்கியை உபயோகப்படுத்துவதுதான் வாடிக்கை. அந்தத் துப்பாக்கியில் ஒரு முறைதான் சுட முடியும். அடுத்து புல்லட் ஒப்பரேட் செய்து பிறகு சுட வேண்டும். அந்தத் துப்பாக்கியில் அதிகபட்சம் 6 குண்டுகள் நிரப்ப முடியும். அதை ஒவ்வொரு முறையும் லோட் செய்ய வேண்டும்.

ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் செல்ப் லோடட் ரைபிள் என அழைக்கப்படும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தியுள்ளனர். இதன் கொள்ளளவு 32 புல்லட்டுகள். ட்ரிக்கரை அழுத்திப் பிடித்தால் அடுத்தடுத்து குண்டுகள் சீறிப்பாயும். தனித்தனியாக லோட் செய்ய வேண்டியது இல்லை. இவைகளை தீவிரவாதிகள், பெரும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும்போது இராணுவத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆனால் வேன் மீது ஏறி நின்று கைதேர்ந்த கொமாண்டோ படை வீரர்கள் பலநூறு மீட்டர் சீறிப்பாயும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறையாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை என அறிவிக்கப்படுகிறது. 


Add new comment

Or log in with...