தூத்துக்குடியில் நேற்றும் துப்பாக்கி சூடு: பதற்றம்: பொலிஸ் வாகனங்களுக்கு தீ | தினகரன்

தூத்துக்குடியில் நேற்றும் துப்பாக்கி சூடு: பதற்றம்: பொலிஸ் வாகனங்களுக்கு தீ

* 'ஸ்டெர்லைட்' ஆலையின் விரிவாக்க பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு
* துப்பாக்கி சூடு; இரு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி அரச மருத்துவமனை அருகே நேற்று இரண்டு பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இரண்டாவது நாளாக அங்கு நேற்றும் பதற்றம் ஏற்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன. அரச மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டிருந்தன அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2 முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெற்றோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர்.

வீதியோரமிருந்த வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும் பதற்ற நிலையை அடைந்தது. பின் வந்த தீயணைப்பினர் போராடி தீயை அணைத்தனர்.

வாகனம் தீ வைக்கப்பட்டதையொட்டி தூத்துக்குடி பிரையண்ட் நகரில் பொலிஸ் அணிவகுப்பு நடத்தினர். 50க்கும் மேற்பட்ட வாகனத்தில் பொலிஸார் அணிவகுப்பு நடத்தினர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.

தூத்துக்குடி அண்ணாநகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அந்த பகுதியில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது பிரிவின் விரிவாக்கத்திற்கு எதிராக பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் நேற்று உத்தரவிட்டனர்.

ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முன்தினம் 100ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரின் தடுப்பை மீறி போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் இவர்கள் பொலிஸாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர்.

தூத்துக்குடி அரச மருத்துவமனையில் போராட்டம் நடத்தியவர்களுடன் மதுரை பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் பொலிஸாரின் பஸ் மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன.

இந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டு இருந்த பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பொலிஸார் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். 


Add new comment

Or log in with...