வெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு | தினகரன்

வெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு

14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்பு

வெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றிருக்கும் நிகொலஸ் மடுரோ கடும் சர்வதேச அழுத்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையிலும் வாக்கு மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டபட்ட நிலையிலுமே கடந்த ஞாயிறு இடம்பெற்ற தேர்தலில் மடுரோ வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஆர்ஜன்டீனா, பிரேசில் மற்றும் கனடா உட்பட பதினான்கு நாடுகள் வெனிசுவேலாவுக்கான தனது தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலை அடுத்து வெனிசுவேலா மீது அமெரிக்கா புதிய தடைகளை அமுல்படுத்தியுள்ளது.

வெனிசுவேலா கடுமையான உணவு பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் குறைவான வாக்குப் பதிவே இடம்பெற்றது.

ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவந்து வெனிசுவேலாவில் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் தேர்தலில் வெற்றி பெற்ற நிகொலஸ் மடுரோவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முகம்கொடுக்கும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்ப்பதற்கு வாழ்த்து தெரிவித்து புடின் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

90 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 55 வயது மடுரோ 67.7 வீதமான, 5.8 மில்லியன் வாக்குகளை பெற்றிருப்பதாக தேசிய தேர்தல் கவுன்சில் தலைவர் டிபிசாய் லுகேனா அறிவித்திருந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்ரி பெல்கோன் 21.2 வீதமான, 1.8 மில்லியன் வாக்குகளை கைப்பற்றியுள்ளார்.

எனினும் இந்த தேர்தலில் முக்கிய இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தல் முடிவை அடுத்து வெனிசுவேலா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்திருக்கும் அமெரிக்கா, அந்நாட்டு அதிகாரிகள் அரச எண்ணெய் விற்பனைக்கு கையூட்டல் பெறுவதை தடுப்பதை இலக்காக கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் வெட்ககரமானது மற்றும் முறையற்றது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பெஸ் குறிப்பிட்டுள்ளார். “வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுவேலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஏற்கனவே மடுரோ மற்றும் அவரது சிரேஷ்ட உதவியாளர்கள் மீது தடைகளை விதித்திருப்பதோடு, அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுவேலா அல்லது அந்நாட்டு எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்குவதையும் தடை செய்துள்ளது.

மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுவேல அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தடையை பைத்தியக்காரத்தனமானது, காட்டுமிராண்டித்தனமானது மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று வெனிசுவேல வெளியுறவு அமைச்சர் ஜோகே அரீசா சாடியுள்ளார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே அந்த தேர்தல் முடிவை ஏற்கப்போவதில்லை என்று அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளும் அறிவித்திருந்தன.

இந்நிலையில் வெனிசுவேலாவுக்கான தமது தூதுவர்களை திரும்ப அழைத்த நாடுகளில் நியூ மெக்சிக்கோ, கொலம்பியா, சிலி, பனாமா மற்றும் பெரு நாடுகளும் அடங்கும். எனினும் ரஷ்யாவுடன் எல் சல்வடோர், கியூபா மற்றும் சீனா நாடுகள் ஜனாதிபதி மடுரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

வெனிசுவேல மக்களின் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும் என்று சீனா கூறியிருந்தது.


Add new comment

Or log in with...