இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்: நாசா எச்சரிக்கை | தினகரன்

இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்: நாசா எச்சரிக்கை

 

இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நாசா எச்சரித்துள்ளது. உலகளவில் சுமார் 34 மண்டலங்களை கடந்த 14 ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் நாசா விஞ்ஞானிகள் அது குறித்த முதற்கட்ட தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதன்படி பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும் உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும் கூறியுள்ளனர். இதற்கு பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும் மோசமான நீர் மேலாண்மையும் முக்கியக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் அவுஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும் அங்கெல்லாம் ஏற்கனவே தண்ணீர் சார்ந்த பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வடஇந்தியாவில் போதுமான மழை இருந்த போதும் அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீரே மிகவும் அத்தியாவசிய வளமாகும் என தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் நிலையாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் மிகவும் குறைவாக அல்லது அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...