'ஸ்டெர்லைட்' ஆலையை மூடும் போராட்டம்; போராளி மீது துப்பாக்கி சூடு | தினகரன்

'ஸ்டெர்லைட்' ஆலையை மூடும் போராட்டம்; போராளி மீது துப்பாக்கி சூடு

 7 பேர் பலி; ஆலை ஊழியர்களின் குடியிருப்புக்கு தீ வைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் தடையையும் மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியானார்கள். சிலர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 100 நாட்களாக 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒருபகுதியாக ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உப கலெக்டர் பிரசாத் மற்றும் எஸ்.பி. மகேந்திரன் ஆகியோர் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது. வணிகர் சங்கத்தினரும் மீனவர் சங்கத்தினரும் கலந்து கொண்ட இந்த சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடைபெறுவதாக இருந்த முற்றுகைப் போராட்டத்தை பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள எஸ்.ஏ.வி. பாடசாலை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பனிமய மாதா ஆலய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் மீனவர்களும் இதனை ஏற்க மறுத்தனர்.

இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது பொலிஸார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதையடுத்து பொலிஸார் பொதுமக்கள்மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பெண் பொலிஸார் அருகில் உள்ள அலுவலகத்திற்குள் புகுந்தனர். இதனால் பொலிஸார் சிதறி ஓடினர். பொதுமக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினர்.

பொலிஸார் பொதுமக்கள்மீது வஜ்ரா வாகனம்மூலம் 5 முறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதை பொருட்படுத்தாத பொது மக்கள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வேறு வழியாகச் சென்றனர்.

அந்தப் பகுதியில் பொலிஸார் இருக்கவில்லை. முக்கிய வீதிகளில் தடுப்புகள் எதுவும் இருக்கவில்லை. நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் பொலிஸார் ஈடுபட்டனர். பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே கலெக்டர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழையவிடாமல் தடுக்க பொலிஸார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். இதனை போராட்டக்காரர்கள் தூக்கி எறிந்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தனர்.

இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் பதற்றத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொலிஸார் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். ஆனால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் பொலிஸாரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசியபோதிலும் கூட்டத்தினர் கலைந்து செல்லவில்லை.

இவா்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடந்தே சென்றனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள் அலுவலக முகப்பில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருந்ததால் தூத்துக்குடியில் பதற்றம் அதிகரித்தது.

இதனிடையே பொலிஸார் தாக்கியதிலும் துப்பாக்கிச் சூட்டிலும் பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியதில் பொலிஸாரும் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகியுள்ளனர். ஒருவரின் பெயர் அந்தோணி என்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் விவரம் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் 7பேர் பலியானதால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புக்கு தீவைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி குடியிருப்புக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் தீப்பிடித்து எரிந்தது.

குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதால் சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. 


Add new comment

Or log in with...