ஓட்டமாவடி பிரதேச கழிவுகளால் பெறுமதி மிக்க சேதனப் பசளை | தினகரன்

ஓட்டமாவடி பிரதேச கழிவுகளால் பெறுமதி மிக்க சேதனப் பசளை

ஓட்டமாவடி பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் சூடுபத்தினசேனை கிராமத்தில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையமொன்று இயங்கி வருகின்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையினால் சூடுபத்தினசேனை கிராமத்திலுள்ள திண்மக் கழிவகற்றல் நிலையம் நிருவகிக்கப்பட்டு வருகின்றது. அங்கு கொண்டு வரப்படுகின்ற சேதனப் பொருட்களில் இருந்து சேதனப்பசளை உருவாக்கப்படுகின்றது.

இத்திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் மூலம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆயிரம் கிலோ கிராம் பசளைகளை தாயாரித்துக் கொள்ள முடிகின்றது. இதன் மூலம் பிரதேச சபை வருமானம் பெறுகின்றது.

சூடுபத்தினசேனை பகுதியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இங்கு கொட்டப்படும் குப்பைகளில் திண்மக் கழிவுக்குப் பயன்படுத்தக் கூடிய குப்பைகளை தெரிவு செய்து விட்டு ஏனைய குப்பைகள் ஓரங்களில் கொட்டப்படுகின்றன. அத்தோடு பாசிக்குடா உல்லாச விடுதிகளின் உணவுக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கடைகளின் கழிவுகள் என்பனவும் கொட்டப்படுகின்றன.

பாசிக்குடா ஹோட்டல்களில் மீதப்படும் உணவுகளை இங்கு கொட்டுவதால் இதனை உண்பதற்காக யானைகள் அதிகம் வருவதுடன், அந்த யானைகள் அண்மித்துக் காணப்படும் காடுகளில் நிரந்தரமாக வசித்து வருகின்றன. யானைகள் மாலை நேரங்களில் உணவு உண்பதற்கு வருவதால் அதனை அண்டியுள்ள வயல் நிலங்கள், சேனைப் பயிர்நிலங்களை சேதமாக்குகின்றன. மக்களின் குடியிருப்புக்களுக்குச் சென்று பயிர்களை நாசம் செய்கின்றன.யானைகளால் மக்களுக்கு உயிராபத்தும் ஏற்படுகின்றது.

அத்தோடு சூடுபத்தினசேனை பகுதியில் குப்பைகளை கொட்டுவதுடன் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை பிரிவில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளையும் அங்கு கொட்டுவதால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் மக்கள் அப்பகுதியில் வசிக்க முடியாதுள்ளதுடன், நிம்மதியாக உணவு உண்ண முடியாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், இங்கு கொட்டப்படும் கழிவுகள் மூலம் மக்கள் பாதிக்கப்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது ஒட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஜீ.அமீர், எம்.பீ.எம்.ஜௌபர், சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.


Add new comment

Or log in with...