எடியூரப்பாவினால் இனிமேல் பா.ஜ.கவுக்கு பயன் கிடையாது! | தினகரன்

எடியூரப்பாவினால் இனிமேல் பா.ஜ.கவுக்கு பயன் கிடையாது!

 

கர்நாடகாவில் பா.ஜ.க சந்தித்த பின்னடைவு காரணமாக எடியூரப்பா கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இருந்து கழற்றி விடப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் அவருக்கு கட்சியில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 104 இடங்களில் வெற்றி பெற்று 7 எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவி விலகிக் கொண்டது. இதனால் தற்போது ம.ஜ.த தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இது எடியூரப்பாவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ம.ஜ.த கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் இன்று அல்லது நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

எடியூரப்பாவின் இந்த மோசமான தோல்வியை அடுத்து அவரை கட்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட முடிவு செய்து இருக்கிறார்கள். அவர் மீது வைக்கப்பட்டு இருக்கும் ஊழல் புகார்கள், இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்தன. இதனால் பா.ஜ.கவிற்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் அமைதிப்படுத்தி விட்டு அவருக்கு பதிலாக ஸ்ரீராமுலு, ஆனந்த் குமார் ஹெக்டே உள்ளிட்ட தலைவர்களை மேலே கொண்டு வர பா.ஜ.கவினர் முடிவு செய்து இருக்கிறார்கள்.

எடியூரப்பா நாடாளுமன்ற தேர்தல் வரை மட்டுமே கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். தற்போது கர்நாடகாவில் சுமார் 20 சதவீத வாக்குகளை லிங்காயத்துகள் பெற்றுள்ளனர். அவர்களின் வாக்குகளை கவரும், சிறந்த பா.ஜ.க முகம் எடியூரப்பாவைத் தவிர வேறு யாருக்கும் கட்சியில் இல்லை.

இதனால் அவரை உடனடியாக விட்டுக்கொடுக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அத்வானிக்கு செய்தது போல செய்து, கட்சியில் ஒன்றும் இல்லாமல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இப்போதே அவருக்கு 70 வயதாகிவிட்டது. மேடையில் பேசும்போது பல இடங்களில் தவறு செய்கிறார். இதனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எல்லாம் அவரை முக்கியமான வேட்பாளராக முன்னிறுத்த முடியாது. இதன் காரணமாக இப்போதே கட்சியில் முக்கியமான ஒரு முகத்தை உருவாக்கி, அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பா.ஜ.கவினர் திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீராமுலுதான் அந்த இடத்திற்கு வர உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் ஏற்கனவே 2013இல் பிரச்சினை நடந்துள்ளது.ஊழல் புகார் காரணமாக எடியூரப்பாவை பாஜக கழற்றி விட்டது. இதனால் அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு 30 தொகுதிகளில் பா.ஜ.கவை எடியூரப்பா தோற்கடித்தார். இதனால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்த நிலைமை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை கர்நாடக மாநில அமைச்சரவையை இறுதி செய்வதற்காக நேற்றுமுன்தினம் டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றதும் வியாழக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி தங்களுக்கு அதிக அளவில் அமைச்சர் பதவி வேண்டும் என்றும், சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜேடிஎஸ்ஸும் கோரி வருகின்றன. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு குமாரசாமி சென்றார்.

 


Add new comment

Or log in with...