தொடரும் சீரற்ற காலநிலை; ஐவர் உயிரிழப்பு | தினகரன்

தொடரும் சீரற்ற காலநிலை; ஐவர் உயிரிழப்பு

தொடரும் சீரற்ற காலநிலை; ஐவர் உயிரிழப்பு-Inclement Weather-5 Killed

 

8,000 பேர் பாதிப்பு

நாட்டின்  எட்டு மாவட்டங்களில் நிலவும் மோசமான காலநிலையால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 08 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தோரில் பெண் பௌத்த பிக்குணி ஒருவரும் உள்ளடங்குகின்றார். 08 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் எத்தகைய நிலைமையையும் எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை நிலையம் தெரிவித்ததுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக ஒன்பது நலன்புரி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. தென்பகுதியில் உள்ள களுகங்கை, ஜின்கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் பல தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், கரையோரங்களை அண்டிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, பதுளை மற்றும் காலி ஆகிய ஏழு மாவட்டங்களில் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

கம்பஹா அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததில் சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுகங்கை நீர்மட்டம் உயர்ந்ததால் மதுராவெல, ஹொரணை, புளத்சிங்கள மற்றும் பாலிந்த நுவர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜின் கங்கையின்  நீர்மட்டம் உயர்ந்தமையால் பத்தேகம-தவளம வீதி, உடுகம-அக்குரஸ்ஸ வீதி, எல்பிட்டிய-தவளம வீதி, பிட்டிகல-தவளம வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, புளத்சிங்கள, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, இங்கிரிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, தெரனியகலை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, ரம்புக்கன, கேகாலை, ருவன்வெல்ல, புலத்கோபிட்டிய, வரக்காபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில்  எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம, மாவத்தகம, இப்பாகமுவ மற்றும் மல்லவபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலும், பதுளை மாவட்டத்தின் ஹல்மதுல்ல பிரதேச செயலகப் பிரிவிலும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, காலி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேசத்திலும் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இருப்பதாக கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 

மோசமான காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க குழுவொன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் தெரிவித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவித்திருக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், 117 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக மேலதிக தகவல்களைப் பெற முடியும் எனக் கூறியுள்ளது. 

அதேநேரம், மழையுடன் கூடிய காலநிலையால் வாகனச் சாரதிகள் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேக்கத்துக்கு அப்பால் பயணிக்க வேண்டாம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. வீதிகள் சறுக்கி விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் ஆர்.டி.ஏ.கஹட்டபிட்டிய தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும்போது 'ஹெட் லைட்களை'ஒளிரவிட்டபடி பயணிக்குமாறும் கேட்டுக் கொண்டார். 

இது இவ்விதமிருக்க நாட்டில் தற்பொழுது நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதால் மழை சில நாட்களுக்கு நீடிக்கும். குறிப்பாக மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழைபெய்யும் என்றும், சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என்றும், இங்கு மணித்தியாலத்துக்கு 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.  

கனமழை பெய்யும் அதேநேரம், தற்காலிகமான கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் குறித்தும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.  

கொழும்பு மற்றும் காலி ஊடாக புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதுடன், அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றராகக் காணப்படும்.  

இது இவ்விதமிருக்க, மேசமான காலநிலையால் இதுவரை மூன்று உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இருவர் மின்னல் தாக்கியும் ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார் வெலிகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். வயல் வேலைக்குச் சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஒருவர் 17 வயது இளைஞர் என்றும் மற்றையவர் 33 வயது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   வெள்ளப்பெருக்கினால் கோகாலை, காலி, அகலவத்தை மற்றும் மத்துகம பிரதேசத்தின் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டது.  

இதுவரை நாடு முழுவதிலும் 2,194 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென் மாகாணத்தில் 1960 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

(மகேஸ்வரன் பிரசாத், பேருவளை விசேட நிருபர்)

 


Add new comment

Or log in with...