இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் சுற்றுப்பயணம் சந்தேகம் | தினகரன்

இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் சுற்றுப்பயணம் சந்தேகம்

இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் சுற்றுப்பயணம் சந்தேகம்-SLvWI Tour not confirmed

 

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் சந்தேகத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.  

இலங்கை அணி வரும் மே 25ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதோடு, முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஸ்பெயினில் ஜுன் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து சென் லூசியா மற்றும் பார்படோசில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன. பார்படோசில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக உள்ளது.  

“முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி பற்றி அவர்கள் (மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை) நேற்று (மே 18) எமக்கு (இலங்கை கிரிக்கெட் சபை) அறிவுறுத்தினார்கள். இது பற்றிய இறுதி முடிவு வரும் திங்கள் (இன்று) அல்லது செவ்வாய்க்கிழமை (நாளை) எடுக்கப்படும். இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர்கள் இந்த நேரத்தில் எம்மை அறிவுறுத்தவில்லை. டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி அவர்கள் ஆலோசிக்கிறார்கள். அதற்கு பதில் வர்த்தக ரீதியில் பெறுமதி கொண்ட ஒருசில ஒருநாள் போட்டிகளை நடத்த எண்ணுகிறார்கள்” என்று இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா கடந்த சனிக்கிழமை கூறினார்.  

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றிபெற்றதில்லை என்பதோடு, இது கடந்த ஒரு தசாப்தத்தில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு மேற்கொள்ளும் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணமாகவும் உள்ளது.  

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பங்களாதேஷின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணமும் இரு கிரிக்கெட் சபைகளின் பரஸ்பர ஒப்புதலுடன் இம்மாத ஆரம்பத்தில் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டால் அல்லது டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் அது எதிர்கால டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பாக அமையும்.     

 


Add new comment

Or log in with...