கிரிக்கெட் சபை தேர்தல் அறிவிக்கப்பட்டபடி மே 31 | தினகரன்

கிரிக்கெட் சபை தேர்தல் அறிவிக்கப்பட்டபடி மே 31

கிரிக்கெட் சபை தேர்தல் அறிவிக்கப்பட்டபடி மே 31-SLC Board Election on May 31

 

தேர்தல் குழுவை நியமிப்பதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக இம்மாதம் 31 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இம்மாதம் 31 ஆம் திகதி நடத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விசேட பொதுச்சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் நிர்வாக சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிதாக நியமிக்கப்பட்ட குழுவில் ரசிக வீரதுங்க, சரத் உத்பல, புத்திக இலங்காதிலக, ஜுட் பெரேரா மற்றும் தேவகிரி பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

முன்னதாக தேர்தல் குழுவை நியமிக்கும் செயற்பாடு புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெறாத காரணத்தால் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இம்மாதம் 19 ஆம் திகதி விசேட பொதுச்சபைக் கூட்டத்தை நடத்தி தேர்தல் குழுவை நியமிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருந்தார். 

அதற்கமைய, சனிக்கிழமை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்றது. 

இம்முறைத் தேர்தலில் 84 கழகங்களைச் சேர்ந்த 143 பேருக்கு வாக்களிப்பதற்கு முடியும் என்பதுடன், மூன்று கிரிக்கெட் கழகங்களுக்கு சட்ட சிக்கல்கள் காரணமாக தேர்தலில் வாக்களிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இம்முறை தேர்தலுக்காக மும்முனைப் போட்டி நிலவும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இதில் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தரப்பினர் தேர்தலுக்காக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். 

எனினும், தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள 3 ஆவது நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகாவிட்டாலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜயந்த தர்மதாச இத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், இம்மாதம் நடைபெறவுள்ள நிர்வாக சபைத் தேர்தல் காரணமாக ஓகஸ்ட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்குப் பாதிப்பு ஏற்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திலங்க சுமதிபால கருத்து வெளியிடுகையில், 

"தேர்தல் காரணமாக எமக்கு பல வேலைகள் உள்ளன. ஆனால் அது லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்கு ஓரு போதும் தடையாக இருக்காது. ஏனெனில் குறித்த போட்டித் தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றோம். எனவே 6 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் உரிய தினத்தில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.    

 


Add new comment

Or log in with...