சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது | தினகரன்

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ அல்லது அநீதி இழைக்கப்படவோ மாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

அத்துடன் எமது நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட மாட்டாதென்றும் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனம் மற்றும் இலங்கை கட்டட நிர்மாண வடிவமைப்பு நிறுவன பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.இதன்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையே செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக பல்வேறு தொழில்துறை சார்ந்தோருக்கு இருக்கும் பிரச்சினைகள், சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் தொடர்ந்தும் பேச்சு நடத்துவதற்கு இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஒப்பந்தம் மற்றும் அதன் இணை ஆவணங்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ள சரத்துகள் தொடர்பாக அறியத்தருமாறும் அவை தொடர்பாக உண்மை நிலைமையை தெளிவுபடுத்த முடியுமென்றும் பிரதமர் இங்கு உறுதியளித்தார்.

இதேபோன்று ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக செயற்திறனுடன் தொடர்புபடவும் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர். இக்கண்காணிப்பின்படி ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமென்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

வர்த்தக உடன்படிக்கைகளுக்கான பிரதான நோக்கம் வெளிநாட்டு முதலீடுகளை எமது நாட்டுக்குள் உள்ளீர்ப்பதும் இலங்கையிலுள்ள தொழில்துறை சார்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் உலகத்தில் ஏனைய நாடுகளிலுள்ள நிறுவனங்களுடன் எமது நாட்டு நிறுவனங்களும் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே நோக்கமென்று அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சுட்டிக்காட்டினார். பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமைச்சின் செயலாளர் சாந்தனி விஜேவர்தன, குடிவரவு ,குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் எம்.என் ரணசிங்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் அதிகாரிகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். 

 

 


Add new comment

Or log in with...