யாத்திரிகர் மடத்தை புனரமைக்க ஏற்பாடுகள் | தினகரன்

யாத்திரிகர் மடத்தை புனரமைக்க ஏற்பாடுகள்

 ஸ்ரீ உகந்தைமலை முருகன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மடம் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை மீளப்புனரமைக்கும் நடவடிக்கையினை கிழக்கிலங்கை மருத்துவ குல மக்கள் சபை முன்னெடுத்துள்ளது.

கதிர்காமம் ஆலயத்துக்குச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்லும் பிரதான வழிபாட்டுத்தலமாக ஸ்ரீ உகந்தைமலை முருகன் ஆலயம் காணப்படுகின்றது. இவ்விடத்தில் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட மடம் மிக நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதன் புனரமைப்பை முன்னெடுத்துச் செல்வதுக்கு யாருமில்லா நிலையிலே கிழக்கிலங்கை மருத்துவ குல மக்கள் சபை அப்பணியை முன்னெடுக்க முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

குறித்த மடத்தினை நிர்மாணிக்கும் பொருட்டு மருத்துவ குல மக்கள் சபையின் உள்நாட்டு, வெளிநாட்டு அங்கத்தவர்களிடமிருந்து ஆதரவு பெறப்பட்டுள்ளதுடன், சபையிலுள்ள அங்கத்தவர்களின் தன்னார்வ செயற்பாட்டின் மூலமே மேற்குறித்த மட நிர்மாணம் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ உகந்தைமலை முருகன் ஆலய மடத்தின் நிர்மாண வேலைகள் கிழக்கிலங்கை மருத்துவ குல மக்கள் சபையின் செயற்பாட்டாளர் தா. தியாகராஜாவின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளன. மேலதிக உதவிகளை மக்கள் முற்போக்கு அபிவிருத்தி சங்கம், பிரதேச விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கவிருப்பது சிறப்பம்சமாகும்.

மேற்குறித்த மடத்தின் நிர்மாணப் பணிகளை உகந்தைமலை உற்சவ காலத்துக்கு முன்னர் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக சபையின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கிழக்கிலங்கை மருத்துவ குல மக்கள் சபை செயற்பாட்டாளர் தியாகராஜா தெரிவித்தார்.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...