அருகருகே இருந்த இரு மர ஆலைகளில் பாரிய தீ | தினகரன்

அருகருகே இருந்த இரு மர ஆலைகளில் பாரிய தீ

அருகருகே இருந்த இரு மர ஆலைகள் தீக்கிரை-Kattankudy Timber Mill Fire

 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் இரண்டு மர ஆலைகள், இன்று (18) வெள்ளிக்கிழமை அதிகாலை தீக்கிரையாகியுள்ளன.

எம்.முபாறக் மற்றும் எம்.எஸ்.எம். இப்றாகீம் ஆகியோருக்கு சொந்தமான மர ஆலைகளே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

அருகருகே இருந்த இரு மர ஆலைகள் தீக்கிரை-Kattankudy Timber Mill Fire

இம்மர ஆலைகள் இரண்டும் அருகருகே உள்ளன. இதில் ஒரு மர ஆலை தீப்பற்றியுள்ளது. இத்தீ அருகிலுள்ள மற்றைய மர ஆலையிலும் பிடித்து இரண்டு மர ஆலைகளும் எரிந்துள்ளதுடன் அங்கிருந்த பெறுமதியான முதிரை மற்றும் தேக்கு உட்பட பல மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.

அருகருகே இருந்த இரு மர ஆலைகள் தீக்கிரை-Kattankudy Timber Mill Fire

குறித்த சம்பவத்தின் காரணமாக இரண்டு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் இயந்திரம் கல்முனை மாநகர சபையின் தீ அணைக்கும் இயந்திரம், உடனடியாக வரவழைக்கப்பட்டு காத்தான்குடி பொலிசார் மற்றும் இராணுவத்தினர், மட்டக்களப்பு மாநகர சபை, கல்முனை மாநகர சபைகளின் தீயணைக்கும் ஊழியர்கள் மற்றும் அங்கு ஒன்று திரண்ட பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அருகருகே இருந்த இரு மர ஆலைகள் தீக்கிரை-Kattankudy Timber Mill Fire

மட்டக்களப்பு மாநகர சபை மேயரிடம் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் முகம்மட் நிப்லர் விடுத்த வேண்டுகோளுக்கமைய மேயர் சரவணபவனின் உத்தரவுக்கமைய தீயணைக்கும் வாகனமும், பிரதியமைச்சர் ஹரீஸ் கல்முனை மாநகர சபை மேயரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய கல்முனை மாநநகர மேயர் சட்டத்தரணி றகீபின் உத்தரவுக்கமைய கல்முனை மாநாகர சபையின் தீயணைக்கும் இயந்திரமும் குறித்த இடத்திற்கு வருகை தந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. இதே நேரம் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி காத்தான்குடி நகர சபையின் தண்ணீர் தாங்கி வாகனத்தை வழங்கி இந்த தீ அணைக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்த தீச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மெற் கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

புனித றமழான் மாதத்தின் முதல் நோன்பு நோற்பதற்காக அதிகாலை மக்கள் தயாரான போது இந்த மர ஆலைகளின் தீச் சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் பெருமளவிலான பொது மக்கள் அங்கு ஒன்று திரண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர மேயர் ரி. சரவணபவன் இங்கு வருகை தந்து அந்த இடங்களை பார்வையிட்டார்.

(புதிய காத்தான்குடி தினகர நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

 


Add new comment

Or log in with...