பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்கு ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு | தினகரன்

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்கு ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு

 

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்யும் எதிர்காலத்தில் தேசிய அணிக்கென தரம்வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டியதுமான தேவைப்பாட்டை இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கச் செயலாளர் டில்ஷான் டி. சில்வா வலியுறுத்தியுள்ளார்.

“சண்டே - ஒப்சேவர்” பத்திரிகைக்கு வழங்கியுள்ள பிரத்தியேக நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், பாடசாலை கிரிக்கெட்டை விருத்தி செய்வதற்கென கல்வி அமைச்சு 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேற்படி நேர்காணலின் போது மேலும் தெரிவிக்கையில், “நாம் கல்வி அமைச்சுக்குச் சொந்தமாக உள்ள போதிலும், இலங்கை கிரிக்கெட்டே எமது இதயங்களில் குடியிருந்து வருகின்றது. ஆகையால், பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு கூட்டு முயற்சி அவசியமாகும்.

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்ெகட் சங்கம், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் கல்வி அமைச்சு ஆகிய திட்டங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றுடன் கூடிய கூட்டு அபிவிருத்தி திட்டமொன்றை வரைய வேண்டும். எத்தனை கிரிக்கெட் போட்டிகளை நடாத்துகின்றோம். என்பதிலும் பார்க்க எத்தனை தரம்மிக்க போட்டிகளை நடாத்துகின்றோம் என்பதே கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமின் பணிப்புரையின் பேரில், ஜயந்த செனவிரத்ன தலைமையிலான விசேட குழுவொன்றில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இரண்டு வருட திட்டமொன்றை வரைந்துள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், ரொஷான் மகாநாம, மஹேல ஜயவர்தன, சிதத் வெத்தமுனி மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

நிபுணத்துவக் குழுவினால் வரையப்பட்டுள்ள குறித்த பாரிய அபிவிருத்தி திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கல்வியியற் கல்லூரிகளில் உள்ள மூன்று மைதானங்களை மேம்படுத்தலும் அடக்கப்பட்டுள்ளது. தரம் வாய்ந்த மைதானங்களை வழங்கும் வகையில் எம்மால் அத்தகைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய முடியும். சிறந்த முறையில் அமைந்த செயலாற்றுகைப் பயிற்சி நிலையமொன்றை தாபிப்பதும், போட்டிகளுக்குத் தேவையான கிரிக்கெட் பந்துகளை வழங்குவதும் இந்த வேலைத் திட்டத்தில் அடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை கிரிகெட்டை மேம்படுத்தும் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் அரும் பணிகளின் பின்புலத்தில் டி. சில்வா பல வருடங்களாக உயிர் நாடியாக விளங்கி வருகின்றார். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியும் புகழ்பூத்த நடுவராக சேவையாற்றியுமுள்ள டி. சில்வாவுக்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. அவர் கடந்த இரு தசாப்தங்களாக வேறுபட்ட பதவிகளை வகித்துள்ளதுடன், நடுவர் சங்கத்தின் அலுவலராக கடந்த ஐந்து வருடங்களாகவும் சேவையாற்றியுள்ளார்.

உண்மையைச் சொல்வதாயின் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தினதும் இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தினதும் சக உத்தியோகத்தர்களுடன் சேர்த்து ஓப்சேவர் -மொபிடெல் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டிக்கான அதன் தெரிவுக்குழுவில் கடந்த பல வருடங்களாகச் சேவையாற்றிவரும் அவர் அதன் தீவிர ஆதரவாளராகவும் விளங்கி வருகின்றார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

மேற்படி மெகா போட்டியின் கடந்த கால வெற்றியாளர்களில் அநேகமானோர், தனது பாடசாலைக்காலத்தின் பின்னர், தேசிய அணியில் இடம்பிடித்த நிலையில் திறமையாக விளையாடியுள்ளனர். நான் இந்தப் போட்டிக்கு ஆரம்பத்தில் விளையாட்டு வீரராகவும் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினதும் நடுவர்கள் சமூகத்தினதும் அலுவலராகவும் சென்றுள்ளேன் என்றார்.

டி/20 கிரிக்கெட் போட்டியானது இளம் வீரர்களின் இயல்பான திறன்களை பாடசாலை மட்டத்தில் மழுங்கடிக்குமா என கேட்கப்பட்ட போது, “நாம் கிரிக்கெட்டின் மூன்று வகையிலான போட்டிகள் அனைத்திற்குமான திறன்படைத்த வீரர்களைக் கண்டறிய வேண்டிய தேவை எமக்குள்ளது.

எனினும், இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் டி/20 இல் செலவிடும் காலப்பகுதியை ஒரு வாரத்திற்குக் குறைவாக மட்டுப்படுத்த வேண்டும் என்பதுடன் தாபிக்கப்பட்ட விளையாட்டில் கூடிய கவனஞ்செலுத்தல் வேண்டும். தற்போது அதிகூடிய அளவில் பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்பட்டுவருவதான பொது அபிப்பிராயம் தவறானதெனக் குறிப்பிட்டார். இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 19 வயதிற்குட்பட்டோருக்கான லீக் சுற்றுப்போட்டிகளை 13 ஆகக் குறைந்துள்ளது. ஆயினும், அதிகளவான பாடசாலைகள் தமது வழக்கமான சிநேகபூர்வ விளையாட்டுக்களைக் கெளரவிக்கும் வகையில் ஐந்து அல்லது ஆறு மேலதிக போட்டிகளை நடாத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் வகையில், இலங்கை கிரிக்கெட் பாரிய சுற்றுப் போட்டிகளை நடாத்தி வருகின்ற போதிலும் அத்தகைய கிரிக்கெட் வீரர்களுக்கு அந்தந்த மாகாணங்களில் தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய கட்டமைப்பு எம்மிடம் இல்லாதுள்ளது. அவர்கள் வேலை தேடி கொழும்புக்கே வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். பாடசாலையை விட்டு விலகும் இளம் வீரர்களுக்கு குறிப்பாக, 19க்கும் 24 க்குமிடைப்பட்ட வயதினருக்கென சிறந்த திட்டமொன்றைக் கொண்டிருத்தல் அவசியமானதாகும்.

கடந்த காலங்களில் நாம் நட்சத்திர வீரர்களின் வருகையை எம்மால் காண முடியவில்லை. ஆயினும், எமக்கு திறமை இல்லை என்று அர்த்தமல்ல. விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பே எமக்குத் தேவையாகவுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் சிலர், தனிப்பட்ட புகழுக்காகவும் மைற்கல் சாதனைக்காகவும் விளையாடிவருவதால் எம்மிடம் குழுவாக இயங்கும் தன்மை காணப்படவில்லை. அத்தகைய வீரர்களால் விளையாட்டில் நிலைத்திருக்கவே முடியாது எனவும் மேலும் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...