மாளிகாவத்தை குழந்தை மரணம்; வளர்ப்புத் தாய் சாட்சியம் | தினகரன்


மாளிகாவத்தை குழந்தை மரணம்; வளர்ப்புத் தாய் சாட்சியம்

மாளிகாவத்தை குழந்தை மரணம்; வளர்ப்புத் தாய் சாட்சியம்-Maligawatte 2 year old dead

 

"கணவனின் அதீத அன்பினாலேயே தாக்கினேன்"

மாளிகாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தை பலத்த உட்காயங்கள் காரணமாகவே உயிரிழந்திருப்பதாக கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா நேற்று தெரிவித்தார். 

இதேவேளை, இக்குழந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள தம்பதியர், அக் குழந்தையின் உண்மை பெற்றோர் இல்லையென்றும், கைதாகியுள்ள பெண், 2 வயது குழந்தையை பல சந்தர்ப்பங்களில் தாக்கியுள்ளமையும் வாக்கு மூலங்களிலிருந்து தெரியவந்துள்ளது. 

கொழும்பு 10 மாளிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தையிலமைந்துள்ள தொடர்மாடியில் வசித்து வரும் தம்பதியினரின் இரண்டு வயது ஆண் குழந்தை திடீரென மரணமாகியிருப்பதாகவும் அவர்கள் எவ்வித பிரேத பரிசோதனையையும் முன்னெடுக்காது இறுதிக் கிரியைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அயலவர்களிடமிருந்து மாளிகாவத்தை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொரளை லேடி றிஜ்வே வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையையும் முன்னெடுத்தனர். 

இதன்போதே குழந்தை உட்காயங்கள் காரணமாகவே உயிரிழந்திருப்பதாக சட்டவைத்திய அதிகாரி அறிவித்தார். 

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரிடமிருந்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியிருxப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகத்துக்கிடமான பெண் ஏற்கனவே இரண்டு தடவைகள் திருமணம் முடித்துள்ளார். அவருக்கு இரண்டாவது திருமணம் மூலமாக 10 வயது பெண் குழந்தையும் மூன்றாவது திருமணம் மூலமாக 06 வயது பெண் குழந்தையொன்றும் உள்ளன.

இப்பெண் ஆரம்பத்தில் தொட்டலங்க பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வாடகைக்கு இருந்துள்ளார். இதன்போது பக்கத்து வீட்டிலிருந்த தமிழ் தம்பதியினருக்கே இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த தமிழ் தம்பதியினர் தாங்கள் வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதனால் குழந்தையை பராமரிக்க முடியுமாவெனக் கேட்டு குழந்தையை இப்பெண் மற்றும் அவரது கணவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர். 

குழந்தையை பெற்றுக் கொண்டதற்காக இவர்களுக்கிடையே எவ்வித சட்ட ஆவணங்களும் கைச்சாத்திடப்படாத நிலையில் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழும் இவர்களிடம் இல்லை. ஆண் குழந்தைக்கு ஹிக்கம் என பெயர்சூட்டி இவர்கள் வளர்த்து வந்துள்ளனர்.

என்றபோதும் கணவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளிலும் பார்க்க இந்த ஆண் குழந்தை மீதே அதிக அன்பும் அக்கறையும் காட்டி வந்ததனால் அடிக்கடி ஆத்திரமுற்ற நிலையில் குழந்தையை பலவாறு தாக்கியிருப்பதாகவும் இப்பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

சம்பவத்தில் மாளிகாவத்தையை வசிப்பிடமாக கொண்டுள்ள மொஹமட் பாத்திமா மொஹமட் சிபானா (29) என்பவரும் அவரது மூன்றாவது கணவரான மொஹமட் அலி மொஹமட் உஸ்மான் (39) என்பவருமே மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். 

இதேவேளை, பொலிஸார் உயிரிழந்த ஆண் குழந்தையின் உண்மையான பெற்றோரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

(லக்ஷ்மி பரசுராமன்)
 


Add new comment

Or log in with...