கண்டி இனக்கலவரம்; திலும் அமுணுகம எம்.பி. வாக்குமூலம் | தினகரன்

கண்டி இனக்கலவரம்; திலும் அமுணுகம எம்.பி. வாக்குமூலம்

கண்டி இனக்கலவரம்; திலும் அமுணுகம எம்.பி. வாக்குமூலம்-Kandy Digana Racist Attack-Dilum Amunugama to TID


கண்டியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இனக்கலவர சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஐ.ம.சு.மு.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம பொலிஸ் தீவிரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை, இன்றைய தினம் (15) முற்பகல் 10.30 மணிக்கு கொழும்பிலுள்ள தீவிரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் பலியானதோடு, முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 200 இற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் சொத்துகள் சேதமாக்கப்பட்டதோடு, சுமார் பல பள்ளிவாசல்களும் எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும், சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்திற்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இனவாத சம்பவங்கள் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவங்கள் தொடர்பில், இனவாத அமைப்பாக கருதப்படும் மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 சந்தேகநபர்கள் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 35 சந்தேகநபர்களும், நேற்று (14) தெல்தெனிய நீதவான் எம்.எச். பரிக்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு எதிர்வரும் மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதித்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...