Friday, March 29, 2024
Home » இந்திய தொழில்வாய்ப்புச் சந்தையை ஆக்கிரமித்துள்ள தமிழகப் பெண்கள்!

இந்திய தொழில்வாய்ப்புச் சந்தையை ஆக்கிரமித்துள்ள தமிழகப் பெண்கள்!

by Gayan Abeykoon
November 15, 2023 12:17 pm 0 comment

ந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்கீடு மிகவும் முக்கியம். ஆனால் பெண்களை வீட்டின் சமையலறையில் இருந்து தொழிற்சாலைக்கும், அலுவலகத்திற்கும் அழைத்துச் செல்ல ஏதுவான சூழ்நிலையை இந்தியாவில் சில மாநிலங்களே சிறப்பாக செய்கின்றன. அவற்றில் நீண்ட காலமாக முன்னோடியாக இருப்பது தமிழ்நாடு ஆகும்.

சத்துணவு, இலவசக் கல்வியில் தொடங்கி தற்போது அரசு பாடசாலையில் படித்த மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பை தொடர மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகை, இலவச பஸ் வசதி போன்றன பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் படிகளாக மாறியுள்ளன. இதை உறுதி செய்யும் வகையில் ஒரு டேட்டா தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உற்பத்தித் துறையில் உள்ள மொத்தப் பெண் தொழிலாளர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாட்டில் உள்ளனர். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2019_-20 ஆம் ஆண்டின் தொழில்துறையின் வருடாந்த கணக்கெடுப்பின்படி, இந்திய தொழில்துறைகளில் பணிபுரியும் 15.8 இலட்சம் பெண்களில் 6.79 இலட்சம் அல்லது 43% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் பணியாற்றும் துறைகளாக தோல், ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் விளங்குகின்றன. அத்துடன் வளர்ந்து வரும் துறைகளான இலத்திரனியல் வாகனங்கள், சோலார் செல் உற்பத்தி, எலக்ட்ரோனிக்ஸ் மற்றும் காலணித் தொழிற்சாலைகளிலும் பெண்கள் அதிகளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் தொழிற்சாலைகளில் பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் அதிகரிக்கும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது உற்பத்தித்துறை சார்ந்த தரவுகள் மட்டுமே ஆகும். சேவைத்துறை, சுயதொழில் போன்றவற்றில் தமிழ்நாடு பெண்களின் பங்கீடு மிகவும் அதிகம். தொழிற்சாலைகள் என்றாலே ஆண்களுக்கான இடம் என்பதை முதன் முதலில் உடைத்தது டாடா குழுமம்தான். தற்போது இந்திய தொழில்துறைகளில் பணிபுரியும் ஒட்டுமொத்த பெண்களில் 43 சதவீதம் என்ற மாபெரும் பங்கீட்டை தமிழ்நாடு கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம், பெண்கள் தைரியமாக இருப்பதோடு அவர்கள் வேலைக்குச் செல்வதற்கு குடும்பங்கள் உறுதுணையாக இருப்பது ஆகும்.

ஓலா ஸ்கூட்டர் தொழிற்சாலையில் தற்போது 3,000 பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பொறியியல் டிப்ளோமா மற்றும் விஞ்ஞானப் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நேர பணியில் சேர்ந்தவர்கள்.

இந்தியாவின் பிற நகரங்களை விடவும் தமிழ்நாட்டை பெண்களின் வேலைவாய்ப்பிற்கான மையமாக மாற்ற முக்கியமான காரணம், நன்கு இணைக்கப்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்பு, பாதுகாப்பான போக்குவரத்து, நல்ல கல்வி வசதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள்/குழந்தை பராமரிப்பு ஆதரவு, பாதுகாப்பான தங்குமிடம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT