காசாவில் கொல்லப்பட்ட 58 பேரின் நல்லடக்கத்திற்கு இடையே பதற்றம் | தினகரன்

காசாவில் கொல்லப்பட்ட 58 பேரின் நல்லடக்கத்திற்கு இடையே பதற்றம்

சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு கண்டம்

இஸ்ரேலிய துருப்புகள் கடந்த திங்கட்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 58 பலஸ்தீனர்களின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. 2014 காசா யுத்தத்திற்கு பின்னர் அதிக உயிரிழப்பு கொண்ட நாளாக பலஸ்தீனர்களுக்கு அன்றைய தினம் மாறியது.

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 70 ஆவது ஆண்டு நிறைவான, பலஸ்தீனர்கள் நாக்பா அல்லது பேரழிவு தினம் என்று அழைக்கும் நாளிலேயே பெருமளவான பலஸ்தீனர்கள் அடக்கம் செய்யப்பட்டனர்.

எனினும் நேற்றைய தினத்திலும் காசா மற்றும் இஸ்ரேலை பிரிக்கும் எல்லை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுக்க இஸ்ரேல் இராணுவம் தயாராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜெரூசலத்தில் அமெரிக்கா சர்ச்சைக்குரிய தனது தூதரகத்தை திறந்த நிகழ்வை ஒட்டியே திங்களன்று இந்த வன்முறைகள் வெடித்தன. இந்த நகர்வானது அமெரிக்காவின் பல தசாப்த கொள்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவருவதாகவும் பலஸ்தீனர்களிடை ஆத்திரத்தை தூண்டுவதாகவும் இருந்தது.

2,700 பேர் வரை காயமுற்ற திங்கட்கிழமை தாக்குதலை ஒரு இனப்படுகொலை என்று பலஸ்தீன அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். எனினும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தற்காப்பு நடவடிக்கை ஒன்றையே எடுத்ததாக இஸ்ரேல் நியாயம் கூறியுள்ளது.

இஸ்ரேல் படைப்பிரயோகத்தை மேற்கொண்டது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. “எல்லை வேலியை அணுகுவது என்பது உயிராபத்தானது அல்லது உயிருக்கு அச்சுறுத்தலான செயல்ல என்பதுவே உண்மை. எனவே அது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று ஜெனீவாவில் வைத்து ஐ.நா மனித உரிமை அலுவலகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில்லோ குறிப்பிட்டார்.

“பாரிய வேலியை அரணாக கட்டி அடுத்த தரப்பின் இரண்டு கைகலையும் துண்டித்த பின் எப்படியான ஒரு அச்சுறுத்தலை விடுக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பலஸ்தீனர்கள் ஏழு வாரங்களாக நடத்திவரும் ஆர்ப்பட்டங்களின் தொடர்ச்சியாகவே கடந்த திங்கட்கிழமையும் காசா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் உருவாக்கப்படும் முன்னர் இருந்த தமது பூர்வீக பூமிக்கு திரும்புவதற்கு அவர்கள் உரிமை கோரி வருகின்றனர்.

எனினும் காசாவின் கிழக்கு எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்பு வேலியை ஒட்டி 13 இடங்களில் சுமார் 40,000 பலஸ்தீனர்கள் கலகத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இதில் எல்லை வேலியை அணுகிய பலஸ்தீனர்கள் கற்கள் மற்றும் தீப்பற்றும் பொருட்களை எரிந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடு நடத்தியதோடு ஆளில்லா விமானங்கள் கொண்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

“ஒவ்வொரு நாடும் தமது எல்லையை பாதுகாக்கும் கடப்பாட்டை பெற்றிருக்கிறது” என்ற இந்த இராணுவ நடவடிக்கையை பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நியாயப்படுத்தியுள்ளார்.

எனினும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, லெபனான், தென்னாபிரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் கண்டித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இஸ்ரேலை பாதுகாக்கும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையில் மாத்தியதரை கடற்கரையை ஒட்டிய 40 கிலோமீற்றர் நீளம் மற்றும் 10 கிலோமீற்றர் அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதியான காசாவில் சுமார் 1.8 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். இது உலகின் மூன்றாவம் மக்கள் செறிவு கொண்ட பகுதியாகும்.

இங்கு பலஸ்தீன இஸ்லாமிய போராட்ட அமைப்பான ஹமாஸ் 2007 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...