அரிசி ஆலையில் தொடங்கி அரசியல் வரையான பயணம் | தினகரன்

அரிசி ஆலையில் தொடங்கி அரசியல் வரையான பயணம்

அரிசி ஆலை எழுதுவினைஞர், ஆர்.எஸ்.எஸ் தொண்டர், பா.ஜ.க நிர்வாகி, எம்.எல்.ஏ, முதல்வர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர், தனிக்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பரிமாணங்களை எடுத்தவர் எடியூரப்பா.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் பா.ஜ.க கைப்பற்றிய ஆசனங்கள் அதிகம்.

கடந்த 1943-ம் ஆண்டு மாண்டியா மாவட்டத்தில், கே.ஆர். பேட் தாலுகாவில், பூக்காநகேரே என்ற கிராமத்தில் பிறந்தவர் எடியூரப்பா. தும்கூர் மாவட்டம், எடியூரில் உள்ள சித்தலிங்கேஸ்வரா கோயிலின் சுவாமியின் பெயரான எடியூரப்பா என்ற பெயரை அவருக்கு அவர்களின் பெற்றோர் சூட்டினர்.

பட்டப்படிப்பை முடித்த எடியூரப்பா, முதன்முதலில் மாண்டியாவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கணக்கு எழுதும் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பு கிடைத்து அதில் தன்னை இணைத்துக் கொண்டு சேவை செய்தார். 1972-ம் ஆண்டு தாலுகா அளவிலான தலைவராக எடியூரப்பா உயர்ந்தார்.

அதன்பின்னர் 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா அதில் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்ட எடியூரப்பா அனைத்து முறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கிடையே 1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார். 1994-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த 1999-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தோல்வியைச் சந்தித்த போதிலும், அங்குள்ள மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2004-ம் ஆண்டு மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வாகி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார் எடியூரப்பா.

கடந்த1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார்.

20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

2006 பெப்ரவரி 3 முதல் 2007 ஒக்டோபர் 8-ம் திகதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.க ஆதரவை விலக்கிக் கொண்டது.

அதன் பின்னர் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தன. 2007 நவம்பர் 12ம் திகதி முதல் 19-ம் திகதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பங்காரப்பாவை விட 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2008ம் ஆண்டு மே 30 முதல் 2011 ஜூலை 31-ம் திகதி வரை முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தார். அதன்பின்னர்அவர் மீது சுரங்க ஊழல் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், அவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏறக்குறைய 20 நாட்கள் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் எடியூரப்பா. அதன் பின்னர் அந்த வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தன்னை குற்றமற்றவராக எடியூரப்பா நிரூபித்தார்.

இதற்கிடையே பா.ஜ.க தலைமையுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினமா செய்து, 'கர்நாடகா ஜனதா பக்சா' எனும் கட்சியைத் தொடங்கினார் எடியூரப்பா. அதன் பின்னர் 2013-ம் ஆண்டில் மீண்டும் பா.ஜ.கவுக்கு வருவதாகத் தெரிவித்த எடியூரப்பா, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.கவில் இணைந்தார்.

எடியூரப்பாவுக்கு திருமணமாகி மித்ராதேவி என்ற மனைவி இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு மர்மமாக அவர் இறந்தார். எடியூரப்பாவுக்கு ராகவேந்திரா, விஜேயந்திரா என்ற மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர். 


Add new comment

Or log in with...