இறந்தோரை நினைவு கூருவதற்கு எவரின் அனுமதியும் தேவையில்லை | தினகரன்

இறந்தோரை நினைவு கூருவதற்கு எவரின் அனுமதியும் தேவையில்லை

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற தமிழ் மக்களின் உயிரிழப்புகளை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் குறித்து தமிழ்நாட்டிலுள்ள 'மே 17' இயக்க ஒருங்கிணைப்பாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான திருமுருகன்காந்தி பத்திரிகையாளர் சந்திப்பொன்றை தமிழகத்தில் நடத்தியுள்ளார்.

"தமிழர்களின் படுகொலைக்கான நினைவேந்தலை தமிழர் கடலில் நாங்கள் அனைவரும் இணைந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். இந்த ஆண்டு வருகின்ற 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணகி சிலைக்கு பின்புறம் தமிழர் கடலோரத்தில் மெரினா கடற்கரையில் இந்நிகழ்வு நிகழ இருக்கிறது" என்று திருமுருகன் காந்தி கூறினார்.

"இதன் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் தெரிவிக்க இருப்பது தமிழ் இனத்தில் நடந்தது இனப்படுகொலை. அந்த இனப்படுகொலையை இந்தியா, அமெரிக்கா, இலங்கை, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மூடி மறைத்து விட முடியாது என்பதை உலகிற்கு அறிவிக்கும் விதமாகத்தான் இந்த இனப்படுகொலை நினைவேந்தலை நடத்தி வருகிறோம். இனப்படுகொலைக்கான விசாரணை​ைய உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் இங்கு இருக்கக்கூடிய அனைத்து ஜனநாயக இயக்கங்களுடைய ஒத்த கோரிக்கையாக இருக்கிறது.

இந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தலை வருகின்ற 20ம் திகதி கடற்கரையில் நடத்தும் பொழுது அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடக்கப் போகிறது. அரசியல் நிகழ்ச்சிக்குத்தான் அனுமதி கேட்க வேண்டும். இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கம் நடத்த வேண்டிய நிகழ்ச்சி. ஜெயலலிதா அம்மையார் நினைவிடத்தில் போய் மரியாதை செலுத்தவோ அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவோ நீங்கள் எந்த அனுமதியும் வாங்குவதில்லை. வாங்கத் தேவையும் இல்லை. அதை போல்தான் இந்த நிகழ்வும் நடக்கிறது" என்று கூறினார் திருமுருகன் காந்தி.

"இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக, போராட்டமாக சித்தரிக்கின்ற ஒரு முயற்சி நடப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆகவே அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த ஒரு நிகழ்வை நீங்கள் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லி தலையிட்டு நிறுத்துவதுதான் சட்டவிரோதமானது. ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்து அதைத் தடுத்து நிறுத்தினீர்களா? அது நடப்பதற்கு உங்களிடம் அனுமதி வாங்குகிறார்களா? அப்படி எதுவும் நடப்பது இல்லை. அப்பொழுது ஏன் இதற்கு மட்டும் அனுமதி வாங்க வேண்டும்? அல்லது பொலிஸ் அனுமதிக் வேண்டும்? இதற்கு மட்டும் தடை எங்கிருந்து வருகிறது? இதற்குத் தடை எங்கும் கிடையாது. கடற்கரையில் நீங்கள் மரியாதை செலுத்துவதற்கான உரிமை காலம்காலமாக இருந்து வருகிறது. அதை நிறுத்துவதற்குகான உரிமை யாருக்கும் கிடையாது" என்று அவர் உறுதியாகக் கூறினார்.

"இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்? அப்படி எதுவும் சட்டத்தில் கிடையாது. பொலிஸார் மூலமாக மத்திய அரசு தலையிடுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த நிகழ்ச்சியை தடுக்க நினைப்பது மத்திய அரசு!அதற்குத் துணையாக தமிழக அரசும் இருக்கிறது. இதைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இலங்கையிலேயே முள்ளிவாய்க்காலில் மரியாதை செலுத்துகின்ற பொழுது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு, நாங்கள் மனித உரிமை மதிக்கிறோம் என்று சொல்லக் கூடிய இந்திய நாட்டில் இறந்தவருக்கு மரியாதை செலுத்துகின்ற போது அதைத் தடுகின்ற தேவை ஏன் இந்திய அரசுக்கு வருகிறது. இலங்கையில் அனுமதிக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சினை?

சர்வதேச அளவில் இந்தியாவின் பெயர் கெட்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நீங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதும் ஒன்றாகும்.

அதில் அமைதியான முறையில் பங்கு எடுத்தவர்கள் மீது பொய்யான வழக்கு பதிந்தது இரண்டாவது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. மூன்றாவது குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கத்திற்காக அவர்கள் குண்டர் சட்டத்தின் மூலமாக கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டமையாகும்.

பிரதமரோ, முதலமைச்சரோ செய்யக் கூடிய அனைத்து நிகழ்ச்சிகளையும் அரசியல் நிகழ்வாகவே பார்க்கிறார்களா?ராஜபக்சவுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு இருக்கிறதா, இல்லையா என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய நிகழ்ச்சிதான் இது. நினைவேந்தல் நடந்தால் ஜெயலலிதா அம்மையார் என்ன தீர்மானம் ஏற்றி அவர்கள் ஆட்சிக் காலத்தில் என்ன நிறைவேற்றினார்களோ அதை இந்த அரசு மறுக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவோம். அதற்காக நீங்கள் என்னைக் கைது செய்தாலும் சரி, அல்லது தாக்கினாலும் சரி அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆகவே இந்த அரசு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதா, இல்லையா? ஜெயலலிதா அம்மையார் எடுத்த கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்களா, இல்லையா? என்று இந்த அரசின் திட்டம் அம்பலத்துக்கு வரப் போகிற நாள் மே 20. எங்கே போகிறோம், வருகிறோம் என்பதை பொலிஸார் பின்தொடர்ந்து வருகிறார்கள். நாங்கள் பஸ்ஸில் போகின்றோமா, ரயிலில் போகின்றோமா என்பதை கண்டுபிடிக்கக் கூடிய பொலிஸார் எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை?" என்று திருமுருகன் காந்தி மேலும் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...