இரணைதீவு இடம்பெயர்ந்த மக்கள் சொந்த காணிகளில் குடியேற அனுமதி | தினகரன்

இரணைதீவு இடம்பெயர்ந்த மக்கள் சொந்த காணிகளில் குடியேற அனுமதி

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பாதுகாப்பு உயர்மட்டக்குழு உறுதி

இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது. இரணைத்தீவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த உயர்மட்டக் குழு இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உறுதியளித்தனர்.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஷ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு நேற்று இரணைத்தீவுக்குச் சென்று இந்த உறுதிமொழியை வழங்கியது.

யுத்தம் காரணமாக இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த தம்மை மீளக் குடியமர்த்துமாறு கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இரணைதீவுக்கு இவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் படகுகள் மூலம் சென்று அங்கு தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவு அதிகரித்தது. இந்த நிலையில் இம்மாதம் 15ஆம் திகதி உயர் மட்டக் குழுவொன்று அங்கு சென்று தீர்வொன்றை வழங்கும் என அரசாங்கம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கமைய உயர்மட்டக் குழு நேற்று இரணைதீவுக்குச் சென்றது.

இக்குழுவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து மீள்குடியேற்றம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். ஏற்கனவே மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படும் என்றும் அறிவித்தனர். அதநேரம், கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும், நாட்டின் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல் மற்றும் இரணைதீவு மக்களின் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் என்றும் உயர்மட்டக்குழு தெரிவித்தது. மீளக்குடியேறவிருக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை கிளிநொச்சி மாவட்ட செயலகம் நிறைவேற்றிக் கொடுக்கவுள்ளது.

முன்னதாக இரணைதீவு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அறிவித்திருந்த அரசாங்கம், 1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவித தடையும் கிடையாது எனக் கூறியிருந்தது.

இரணைதீவில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் எந்தவொரு தனியார் காணிகளையும் கையகப்படுத்தவில்லை. அவர்கள் அரசாங்க காணிகளிலேயே இருக்கின்றனர். ஆறு ஏக்கரும் 53 ஹெக்டெயர் நிலப்பரப்பிலேயே கடற்படையினர் இருக்கின்றனர். இந்தக் காணிகள் காணி ஆணையாளரின் ஊடாக பெறப்பட்டுள்ளன.

இரணைதீவில் உள்ள அரசாங்க காணிகள் மற்றும் தனியார் காணிகளை அளவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தக் காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அதில் தனியார் காணிகள் இருந்தால் அவற்றை அனுமதியுடையவர்களுக்கு வழங்குவது பற்றி தீர்மானம் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக இரணைதீவில் தற்காலிகமாகத் தங்கியிருந்து போராடியவர்களை நேரடியாகச் சென்று சந்தித்திருந்ததுடன், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கியிருந்தனர். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நிவாரணப் பொருட்களுடன் சென்றிருந்தனர். அது மாத்திரமன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் இரணைதீவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...