பஸ் கட்டணம் இன்று முதல் 6.56 வீதத்தினால் அதிகரிப்பு | தினகரன்

பஸ் கட்டணம் இன்று முதல் 6.56 வீதத்தினால் அதிகரிப்பு

எரிபொருள் விலை உட்பட 12 அம்ச அளவுகோளின் பிரகாரம் கணிப்பு

எரிபொருள் விலை உயர்வுக்கு அமைய பஸ் கட்டணங்களை 6.56 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (16) முதல் தனியார் பஸ் கட்டணங்கள் உயரும் எனவும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பஸ் மறுசீரமைப்பு தொடர்பான 12 அளவுகோள்களின் பிரகாரமே கட்டண அதிகரிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய தனியார் பஸ் கட்டண அதிகரிப்பின் பிரகாரம்  13 ரூபா கட்டணம் 14 ரூபாவாகவும் 17 ரூபா கட்டணம் 18 ரூபாவாகவும் ஒரு ரூபாவினால் உயர்வடைகிறது.

100 ரூபா கட்டணம் 106 ரூபாவாகவும் 150 ரூபா கட்டணம் 159 ரூபாவாகவும் உயர்வடைகிறது. உச்ச பட்ச கட்டணமான 733 ரூபா கட்டணம் 781 ரூபாவாக அதிகரிக்கிறது. பஸ்கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு கடந்த 14 ஆம் திகதி கூடி ஆராய்ந்தது.

பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பான 12 அளவுகோள்களின் படி பஸ் கட்டணத்தை மறுசீரமைப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் ரத்னாயக்க , தேசிய வரவு செலவுத் திணைக்கள பணிப்பாளர் ஹேரத், புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் அலஹகோன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலைவி என்.டீ.எஸ் ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பஸ் சேவைக்கு கிலோ மீட்டருக்கான செலவு, பஸ்சேவைக்கான செலவு என்பவற்றை மீள கணித்து புதிய கட்டணம் தயாரிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இந்த கட்டண மறுசீரமைப்பு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.இன்று முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வருவதோடு அரைச்சொகுசு பஸ்கட்டணமும் இதற்கமைய மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

ஷம்ஸ் பாஹிம் 

 


Add new comment

Or log in with...