'முன்னோக்கி நகர்வோம்' புதிய அமைப்பு உதயம் | தினகரன்

'முன்னோக்கி நகர்வோம்' புதிய அமைப்பு உதயம்

யாழ்.நல்லூரில் அங்குரார்ப்பண நிகழ்வு

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ந.வித்தியாதரன் ஆகியோரை இணைப்பாளர்களாகக் கொண்டு யாழில் ‘முன்னோக்கி நகர்வோம்” எனும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(15) முற்பகல்-10 மணி முதல் யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் பின் வீதியில் நடைபெற்றது.

வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் விதவைகளின் நிலைபேறான வாழ்வாதார மேம்பாட்டிற்கு அரச நிறுவனங்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும் நோக்கிலும், குறித்த திட்டங்களைத் துரித கதியில் செயற்படுத்தும் நோக்குடனும் “முன்னோக்கி நகர்வோம்” எனும் இந்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி அமைப்பின் இணைப்பாளரும், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான சி. தவராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தின் பின் வீதியில் எமது காரியாலயம் நிரந்தரமாக இயங்கும். காரியாலய வேலை நேரங்களில் அரசு, அரச நிறுவனங்கள், அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் மந்தகதியிலான செயற்பாடுகள் தொடர்பாக எம்மிடம் தெரிவித்தால் அப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காண்பதற்கான அழுத்தத்தை நாம் நிச்சயம் வழங்குவோம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி நகர்வோம் என்றார்.


Add new comment

Or log in with...