காங்கிரஸ் -ஜனதாதளம் இணைந்து கூட்டாட்சி | தினகரன்

காங்கிரஸ் -ஜனதாதளம் இணைந்து கூட்டாட்சி

முதல்வராகிறார் குமாரசுவாமி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்க முடிவெடுத்துள்ளன. எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காத நிலையில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முன்வந்துள்ளன.

அதேநேரம், சட்டமன்றத்தில் தமக்குப் பெரும்பான்மை இருப்பதாக பாரதீய ஜனதாக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, கர்நாடக ஆளுநருக்கு அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றது. வாக்கெண்ணும் பணிகள் நேற்றுக் காலை முதல் இடம்பெற்றன. வாக்குகள் எண்ண ஆரம்பித்தது முதல் பாரதீய ஜனதாக் கட்சி முன்னிலை வகித்தது. வாக்கெண்ணும் பணிகள் முடிவடைந்தபோது பாரதீய ஜனதாக் கட்சி 107 ஆசனங்களையும், காங்கிரஸ் கட்சி 78 ஆசனங்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி 38 ஆசனங்களையும் பெற்றதுடன், இரு சுயேச்சை உறுப்பினர்களும் தெரிவாகினர்.

ஆரம்பத்தில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஏற்பட்ட முன்னிலையைத் தொடர்ந்து ஏனைய மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமையப்போகிறதென்ற கருத்து உருவானது. இதனால் பாரதீய ஜனதாக் கட்சியின் மத்திய அமைச்சர்கள் இனிப்புக்களைப் பகிர்ந்து கொண்டாடியிருந்தனர். எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான 112 ஆசனங்களைப் பெற்றிராத நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்தது.

காங்கிரஸின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடக அரசியலில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் இராமசாமி, காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போவதாகவும், இதனைத் தெரிவிக்க நேரம் ஒதுக்கித் தருமாறும் ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். மாலை 5.30 மணி முதல் 6 மணிக்கிடையில் நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பாரதீய ஜனதாக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா மாலை 5 மணிக்கு கர்நாடக ஆளுநரைச் சந்தித்து தனக்குப் பெரும்பான்மை இருப்பதாகவும், இதனை சட்ட சபையில் நிரூபிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இதன் பின்னர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இணைந்து ஆளுநரைச் சந்தித்து தமக்குப் பெரும்பான்மை இருப்பதாக அறிவித்தனர்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதாயின் 116 ஆசனங்கள் இருக்கின்றன. அதேநேரம் சுயாதீன சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

நமது நிருபர் 


Add new comment

Or log in with...