ப.ஜ.கவுக்கு கூடுதல் ஆசனம்: காங்.+ ஜனதாதளம் கூட்டாட்சி? | தினகரன்

ப.ஜ.கவுக்கு கூடுதல் ஆசனம்: காங்.+ ஜனதாதளம் கூட்டாட்சி?

காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் இணைந்து ஆளுநர் வஜுபாய் ருடாபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக இருந்தனர். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார், அவருடன் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் சென்றிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ள கடிதத்தை காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

இதேவேளை, கர்நாடக ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உரிமை கோரினார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா, பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசத்தை அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி. ஆளுநருக்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி அனுப்பிய கடிதத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வளைக்க நினைத்த பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.

இந்தத் தேர்தலில் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 78 இடங்களிலும் மஜத 38 இடங்களிலும் ஏனையவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதனையடுத்து அங்கு ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தேவகவுடா மற்றும் குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய்வாலாவை நேரில் சந்தித்தார். அப்போது ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். பின்னர் அவர் கூறுகையில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநரை சந்தித்து உரிமை கோரினோம். ஒரு வாரத்தில் சட்டசபையில் எங்களின் பெரும்பான்மையை நிருபிப்போம்.

உரிய முடிவெடுப்பேன் என கவர்னர் கூறியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காங்கிரசின் ஆதரவை ஏற்று கொள்வதாகவும் ஆட்சியமைப்பது தொடர்பாக நேரில் சந்திக்க அனுமதி வழங்கும்படி அதில் கூறியிருந்தார். இந்நிலையில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவும் கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சந்திக்க நேரம் கேட்டதாகவும் சந்திப்பின் போது ஆட்சியமைக்க உரிமை கோருவோம் எனவும் அவா் கூறினார்.

வஜுபாய் வாலா குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.

வஜுபாய் வாலா குஜராத்தைச் சேர்ந்தவர். இவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் ஆவார்.

குஜராத் சட்டசபை சபாநாயகராக 2012 முதல் 2014 வரை பதவி வகித்தவர் வஜுபாய் வாலா. அதாவது மிக மிக லேட்டஸ்டாகத்தான் இவர் ஆளுநர் பதவிக்கு வந்தவர். அதற்கு முன்பு வரை தீவிர அரசியல்வாதியாக திகழ்ந்தவர்.

மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் வஜுபாய் வாலா. குஜராத் அமைச்சராக 1997 முதல் 2012 வரை பல்வேறு துறைகளை வகித்துள்ளார். அம்மாநில நிதியமைச்சராக 18 முறை இருந்தவர். 18 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தவரும் கூட. ராஜ்கோட் தொகுதியிலிருந்து குஜராத் சட்டசபைக்கு பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் வஜுபாய் வாலா.

ஜனசங்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தீவிர ஆர்எஸ்எஸ் காரர். அவசர நிலை காலத்தில் 11 மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் கர்நாடக ஆளுநராக இருந்து வருகிறார் வஜுபாய் வாலா. தற்போது கர்நாடகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்ற பெரும் சிக்கலில் வஜுபாய் வாலா உள்ளார். அவரது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

கர்நாடகாவில் கடந்த 12ம் திகதி 222 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உட்பட‌ 2622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30 தமிழர்களும் களமிறங்கினர். காங்கிரஸ் கட்சி 221 தொகுதிகளிலும் பாஜக 222 தொகுதிகளிலும் மஜத 199 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதின.

இந்த வாக்குகள் அனைத்தும் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெங்களூரில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

கர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 


Add new comment

Or log in with...