மானியங்களின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்குமா? | தினகரன்

மானியங்களின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்குமா?

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளை கடந்த வாரம் முதல் அதிகரித்துள்ளது. இவ்விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் போது குறிப்பாக மண்ணெண்ணெய் பாவனையாளர்கள் குறித்து விஷேட கவனம் செலுத்த அரசாங்கம் தவறவில்லை. இதற்கு குறைந்த வருமானம் பெறும் மண்ணெண்ணெய் பாவனையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் மானியத் திட்டம் நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. குறிப்பாக சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களும் மீனவர்களும் இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்னர்.

அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொடுக்கவென ஐந்து பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மண்ணெண்ணெயில் இயங்கும் படகுகளுக்காக 3 இலட்சத்து 718 மில்லியன் ரூபாவும், டீசலில் இயங்கும் படகுகளுக்காக 1295 மில்லியன் ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பாரம்பரிய மீன்பிடிப் படகுகளுக்காக 349 மில்லியன் ரூபாவும், பைபர் கிளாஸ் மீன்பிடிப் படகுகளுக்காக 3368 மில்லியன் ரூபாவும், ஒரு நாள் படகுகளுக்காக 140 மில்லியன் ரூபாவும் என்றபடி மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.

இத்திட்டம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள்துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா அமைச்சில் நேற்றுமுன்தினம் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் விபரித்து இருக்கின்றார்.

ஆகவே இந்த அரசாங்கம் மண்ணெண்ணெயின் விலையை அதிகரிக்கும் போது கடந்த காலங்களைப் போன்றல்லாது இதனை அதிகம் பாவிக்கும் வருமானம் குறைந்த மக்களையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரண ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பின்னர் தான் இவ்விலையுயர்வை மேற்கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

இருந்த போதிலும் இந்த ஏற்பாடுகள் மீனவர்களை உரிய முறையில் சென்றடைவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பது நன்கு தெளிவாகின்றது. அதன் விளைவாகவே நீர்கொழும்பு, சிலாபம், கல்பிட்டி, காலி உட்பட நாட்டின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் எரிபொருள் மானியம் கோரி நேற்றுமுன்தினம் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டனர். அத்தோடு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டனர். ஆனால் எரிபொருள் விலையேற்றத்தை மேற்கொள்ளும் போது மீனவர்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண ஏற்பாடுகளை அறிந்து கொள்ள மீனவர்கள் ஆர்வம் காட்டி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களுக்கான நிவாரண ஏற்பாடுகள் தொடர்பில் உரிய நேரகாலத்தில் அரசாங்கம் அறிவூட்டி இருக்க வேண்டும். அப்போது இந்த பணிப் பகிஷ்கரிப்பும், ஆர்ப்பாட்டங்களும் தேவையற்றதாக அமைந்திருக்கும்.

ஆனால் கடற்றொழிலாளர்கள் எடுத்த எடுப்பிலேயே ஏனைய துறையினரைப் போன்று பணி பகிஷ்கரிப்புக்கு சென்றனர். இது நியாயப்படுத்த முடியாத பணிப்பகிஷ்கரிப்பும், ஆர்ப்பாட்டமும் ஆகும்.

என்றாலும் கடற்றொழிலாளர்கள் தாம் பெற்றுக் கொள்ளும் மானியத்திற்கு ஏற்ற பிரதிபலன்களை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கின்றார்களா? என்பது குறித்தும் இந்த சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இது முற்றிலும் கடலால் சூழப்பட்ட தீவு நாடாக இருந்த போதிலும் மீனுக்கான விலை நியாயமானதாக இல்லை என்பது சாதாரண மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சில பிரசேதங்களில் சில மீன்களின் விலைகள் அதிகம் என்பதால் சாதாரண மக்களினால் மீன் உணவை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு காணப்படுகின்றது. இது தொடர்பிலான பெரிய மனக்குறை சாதாரண மக்கள் மத்தியில் நீடித்து நிலைக்கின்றது. இருந்தும் இம்மனக்குறை குறித்து கடற்றொழிலாளர்கள் ஏற்கனவே கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை.

ஆனாலும் இனியாவது தாம் பெற்றுக் கொள்கின்ற மானியத்திற்கு ஏற்ற பிரதிபலன்களை நாட்டு மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க கடற்றொழிலாளர்கள் முன்வர வேண்டும். ஒவ்வொருவரது ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் மீன் உணவு மிகவும் அவசியமானது.

அதேநேரம் தாமும் மக்கள் சேவையாளர்கள் என்ற மனப்பான்மையுடன் செயற்படக் கூடிய நிலைமை கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். அப்போது தான் சாதாரண மக்களாலும் நியாய விலையில் மீன்களைக் கொள்வனவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இருந்த போதிலும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்திற்கு ஏற்ற பிரதிபலன்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் இந்த மானியமும் வழங்கப்படுகின்றது என்பது மறைக்க முடியாத உண்மையாகும். அதனால் மானியத்திற்கு ஏற்ற பிரதிபலன்கள் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுவதைக் கண்காணிக்கவென விஷேட கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியமானது. அப்போது சாதாரண மக்களும் நியாய விலையில் மீன்களைக் கொள்வனவு செய்து கொள்ளக் கூடிய நிலைமை உருவாகும்.


Add new comment

Or log in with...