Thursday, March 28, 2024
Home » காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியில் இஸ்ரேலிய படைகள் குவிப்பு

காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியில் இஸ்ரேலிய படைகள் குவிப்பு

ஹமாஸுடன் உக்கிர மோதல்: பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பேச்சு

by Gayan Abeykoon
November 15, 2023 7:28 am 0 comment

காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலில் இஸ்ரேலிய டாங்கிகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு சிக்கி இருக்கும் ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பதில் இஸ்ரேல் நிதானமாக செயற்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

நோயாளர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் என இந்த மருத்துவமனையில் சுமார் 10,000 பலஸ்தீனர்கள் சிக்கி இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“நிலைமை மோசமாகவும், மனிதாபிமானமற்ற நிலையிலும் உள்ளது” என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எக்ஸ் சமூகதளத்தில் எச்சரித்துள்ளது.

நிலைமை மோசமடைந்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி பைடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு. நாங்கள் இஸ்ரேலுடன் தொடர்பில் இருக்கிறோம். பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

இஸ்ரேலின் மற்றொரு நெருக்கமான நாடான பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக்கும், காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அல் ஷிபா மருத்துவமனையை ஒட்டி இஸ்ரேலிய படை மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே கடந்த ஒரு சில தினங்களாக மோதல் உக்கிரமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தின் முற்றுகை மற்றும் போதுமான எரிபொருள் இல்லாததால் கடந்த மூன்று தினங்களில் அல் ஷிபா மருத்துவமனையில் கடந்த மூன்று தினங்களில் பிறந்த மூன்று குழந்தைகள் உட்பட 32 நோயாளர்கள் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா கடந்த திங்களன்று (13) கூறியிருந்தார்.

அல் ஷிபா மருத்துவமனையில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. குளிர்பதன வசதி இல்லை. உடல்கள் குவிந்து கிடக்கின்றன. மருத்துவமனை தற்போது மயானம் போல் காட்சியளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாரிய புதைகுழியில் 179 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக அல் ஷிபா மருத்துவமனையின் பணிப்பாளர் முஹமது அபூ சல்மியா நேற்று தெரிவித்திருந்தார். அவர்களை இவ்வாறு அடக்கம் செய்வதற்கு தள்ளப்பட்டதாகவும் இதில் ஏழு குழந்தைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மரணித்த 29 நோயாளர்களின் உடல்களும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அழுகிய உடல்களைப் புதைப்பதற்காக மருத்துவமனையை விட்டு வெளியேற இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்காததால், நாய்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து சடலங்களை உண்ண ஆரம்பித்திருப்பதாக மருத்துவமனையின் முகாமையாளர் மருத்துவர் மொஹமட் அபூ செல்மியா முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஹமாஸ் அமைப்பு இந்த மருத்துவமனைக்குக் கீழ் சுரங்கப்பாதை அமைத்து நோயுற்ற மற்றும் காயமடைந்த மக்களை அரணாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் சுமத்தும் குற்றச்சாட்டை அந்த பலஸ்தீன போராட்ட அமைப்பு மறுத்துள்ளது.

மருத்துமனையை இலக்கு வைக்கவில்லை என்று கூறும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை அழித்து ஒழிப்பதாக சூளுரைத்து வருகிறது.

காசா மீது இஸ்ரேல் ஒரு மாதத்திற்கு மேலாக இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் உட்பட 11,240 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் தரைவழியாக மோதலில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலின் 46 துருப்புகள் இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் இரண்டு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது.

காசா நகரை ஒட்டி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை உக்கிர மோதலில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் நேற்று வெளியிட்ட வீடியோவில், போராளிகள் குண்டுவீச்சினால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் மறைந்திருந்து இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் படைகள் மீது ரொக்கெட்டால் செலுத்தப்படும் கையெறி குண்டுகள் மற்றும் குறுகிய தூர ரொக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது தெரிகிறது.

காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடைவிடாது தொடர்வதோடு தெற்கு காசாவின் கான் யூனிஸில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். இதன்போது இரு வீடுகள் மீதே இஸ்ரேல் குண்டு வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

உடன்பாட்டுக்கு முயற்சி

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் ஊடுருவி நடத்திய தாக்குதலில் 1200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையிலேயே காசாவில் போர் வெடித்தது.

இந்நிலையில் ஐந்து நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்குப் பகரமாக காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வீடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். வடக்கு காசாவில் இஸ்ரேல் தடைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அங்குள்ள பலஸ்தீனர்களை தெற்கை நோக்கி செல்லும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எனினும் இஸ்ரேல் தெற்கிலும் தொடர்ந்து வான் தாக்கதல்களை நடத்தி வருகிறது.

அல் கஸ்ஸாம் படை டெலிகிராமில் வெளியிட்டிருக்கும் ஓடியோ பதிவில், ஐந்து நாள் போர் நிறுத்தத்திற்காக 70 பெண்கள் மற்றும் சிறுவர்களாக பணயக்கைதிகளை விடுவிக்க நாம் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

“ஐந்து நாள் போர் நிறுத்தத்தில், அவர்களில் 50 பேரை விடுவிக்க முடியும் என்றும், வெவ்வேறு பிரிவுகளால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் சிரமம் காரணமாக அந்த எண்ணிக்கை 70 ஐ எட்டும் என்றும் நாங்கள் (கட்டார்) மத்தியஸ்தர்களிடம் கூறினோம்” என்று அல் கஸ்ஸாம் படையின் பேச்சாளர் அபூ உபைதா தெரிவித்துள்ளார். எனினும் இஸ்ரேல் 100 பேரை விடுவிக்கக் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காசாவில் முழு முற்றுகையை செயற்படுத்தி வரும் இஸ்ரேல் அங்கு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதை நிராகரித்து வருகிறது. அவ்வாறான போர் நிறுத்தம் ஹமாஸ் ஒருங்கிணைவதற்கு உதவும் என்று குறிப்பிடுகிறது. எனினும் உணவு மற்றும் ஏனைய உதவிகள் செல்லவும் காசாவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்காகவும் இஸ்ரேல் மனிதாபிமான சண்டை நிறுத்தங்களை மேற்கொள்வதாகக் கூறுகிறது.

இந்நிலையில் பணயக்கைதிகளின் விடுதலையுடன் தொடர்புபட்டு மணித்தியாலங்கள் அன்றி நாட்கள் நீடிக்கும் நீண்ட போர் நிறுத்தம் ஒன்றை அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் பெரும்பாலானோரை விடுவிப்பது மற்றும் சமகாலத்தில் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீன பெண்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே உடன்பாடு ஒன்று நெருங்கி இருப்பதாக இஸ்ரேல் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குக் கரை வன்முறை

மேற்குக் கரையில் இடம்பெற்ற புதிய வன்முறைகளில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு மற்றும் பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் குறைந்தது மூவர் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியாகி இருப்பதாக மேற்கு நகரான துல்கர்மானில் உள்ள மருத்துவமனை ஒன்றை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக துல்கர்மானுக்கு துருப்புகள் மற்றும் பொலிஸாரை அனுப்பியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதன்போது ஏற்பட்ட மோதலில் பல பலஸ்தீன துப்பாக்கிதாரிகளை கொன்றதாகவும் அது தெரிவித்துள்ளது.

அந்த நகரில் உள்ள அகதி முகாம் ஒன்றில் முன்னதாக ஏற்பட்ட மோதலின்போது குறைந்தது இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வபா செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குக் கரையில் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக வன்முறை அதிகரித்து காணப்படுவதோடு காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அங்கு நிலைமை மேலும் மோசமடைந்திருப்பதோடு இது மற்றொரு போர் முனையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா போரினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிழக்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது எட்டு ஈரான் ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேலுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானில் வான் தாக்குதல்களை நடத்தின.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT