உயிரை பணயம் வைத்து தாயகம் திரும்பும் அகதிகள் | தினகரன்

உயிரை பணயம் வைத்து தாயகம் திரும்பும் அகதிகள்

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போர் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்து தாயகம் திரும்பி வருகின்றனர்.

இவர்கள் தாயகம் திரும்பக் காரணம் என்ன? இது குறித்து மண்டபம் அகதிகள் முகாமில் வசிப்போர் கூறுகையில் "எங்களது பிரதான கோரிக்கை எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே" என்கின்றனர்.

இலங்கையில் 1983-இல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்ட போதும் இராமேஸ்வரத்துக்கு அகதிகளின் வருகை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-இற்கும் அதிகமானோர் பொலிஸ் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்து விட்டு வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.

இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தற்போது 539 குடும்பங்களைச் சேர்ந்தஆண்கள் 680 பேர், பெண்கள் 704 பேர், ஆண் குழந்தைகள் 183 பேர், பெண் குழந்தைகள் 193 பேர் என மொத்தம் 1,760 பேர் வசித்து வருகின்றனர்.

இதில் கடந்த மாதம் 4 குடும்பங்களில் ஆண்கள் 12 பேர், பெண்கள் 5 பேர்,ஆண் குழந்தை 5 பேர், பெண் குழந்தை 1 உட்பட 23 பேர் இலங்கை திரும்பிச் செல்ல அனுமதி கோரியுள்ளனர். இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக இலங்கை அகதிகள் சட்டவிரோதமாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடனும் தாயகம் திரும்பிச் செல்கின்றனர்.

இதில் குறிப்பாக அனுமதி பெறாமல் படகுகளில் சட்டவிரோதமாகவே அதிகமானோர் இலங்கை சென்று வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர் போர்வையில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த திரிஷாந்த் என்ற இலங்கை அகதி மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்த போது திரிஷாந்த் இந்தியா திரும்ப மறுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற வாயிலாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகளின் அனுமதியுடன் திருகோணமலையில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதே போல கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் திகதி மண்டபத்தில் இருந்து அனுமதி பெறாத படகு மூலம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த திருகோணமலை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் தப்பிச் சென்று சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 5ஆம் திகதி புதுக்கோட்டை முகாமில் இருந்து இரண்டு ஆறு மாத கைக்குழந்தைகள் உட்பட நான்கு குழந்தைகள், மூன்று பெண்கள், ஐந்து ஆண்கள் உட்பட பன்னிரண்டு அகதிகள் சட்டவிரோதமாக தமிழக அரசின் அனுமதியின்றி உயிரைப் பணயம் வைத்து இலங்கை சென்றனர். இவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தால் விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற படகு ஓட்டிகள் இரண்டு பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக முகாமில் இருந்து ஏன் தாயகம் திரும்புவதற்கு அகதிகள் விரும்புகின்றனர் என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

இது குறித்து மண்டபம் முகாமில் உள்ள மாசிலாமணி என்பவர் இவ்வாறு கூறுகிறார்.

"வழக்கு உள்ளவர்களால் அரசின் அனுமதியுடன் இலங்கை செல்ல முடியாது, அப்படிப்பட்ட சிலர் எங்கள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக சென்றுள்ளனர். நாங்கள் இலங்கைக்குச் செல்ல அரசிடம் அனுமதி கேட்டு பதிந்தால் கூட, அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்வதால் பலர் சட்டவிரோதமாக செல்கின்றனர்" என்கிறார் அவர்.

மண்டபம் முகாமில் வசித்து வரும் மாசிலா தேவி, "நாங்கள் உயிரைக் காப்பற்றிக் கொள்ள இந்தியா வந்த போது ஆவணங்கள் எல்லாம் கடலில் போய் விட்டன. தற்போது மீண்டும் இலங்கைக்குச் செல்ல கடவுச்சீட்டு பெற முடியவில்லை. அரசு நாங்கள் வந்த போது 'அகதி' என பதிந்த ஆவணத்தை வைத்து கடவுச்சீட்டு வழங்கினால் கள்ளத் தோணியில் இலங்கை செல்லத் தேவை இல்லை" என்று கூறினார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக மண்டபம் முகாமில் அகதியாக வாழ்ந்து வரும் லோகநாதன், "எங்களில் நிறையப் பேருக்கு இலங்கை செல்ல விருப்பம் இல்லை. இந்தியாவில் இருக்கத்தான் விரும்புகிறோம். அரசு எங்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மறுப்பதால், எத்தனை ஆண்டுகள் முகாமில் இருந்தாலும் அகதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதால் நாட்டுக்கு திரும்பச் செல்ல விரும்புகிறோம்" என்கிறார்.

கடவுசீட்டு பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் அவசியமாகும்.

"முதலில் பிறப்புச் சான்றிதழ், அடுத்ததாக அகதிச் சான்றிதழ், பின்னர் பொலிஸ் தரப்பில் வழங்கக் கூடிய தடையில்லா சான்று, இவற்றை தூதரக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்கள் அனுமதிச் சீட்டு வழங்குவார்கள். அதனை எங்களது தொண்டு நிறுவனத்தில் வழங்கினால் நாங்கள் இலங்கை செல்ல பயணச் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்கிறார் தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த மாலா.

இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் மதிவாணன், "இலங்கையில் இனப் பிரச்சினையின் போது அங்கு இருந்து அதிகமானோர் இந்தியா வந்து முகாமில் வாழ்ந்து வந்தனர். பின்னர் 45 சதவீதம் மக்கள் மீண்டும் இலங்கைக்கே சென்று விட்டனர். இங்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் இருந்தால் அவர்கள் இலங்கை திரும்பிச் செல்லும் போது இலங்கை குழந்தையா அல்லது இந்தியக் குழந்தையா என்ற நிலை உருவாகிறது. அதனால் எங்கள் நிறுவனம் சார்பில் தாய் தந்தையின் பிறப்பு சான்று மற்றும் திருமணச் சான்றைப் பெற்று அந்த குழந்தைக்கு பிறப்பு சான்று எடுத்துத் தருகிறோம். அப்படி பெற்றால் மட்டுமே அந்த குழந்தையால் இலங்கையில் குடியுரிமை பெற்று வாழ முடியும்" என்று தெரிவித்தார்.

மண்டபம் அகதிகள் முகாம் துணை வட்டாச்சியர் (மறுவாழ்வு) ரவி, "உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அரசே நடவடிக்கை எடுத்து தொண்டு நிறுவனம் மூலம் இலங்கைக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்கும். சட்டவிரோதமாக தப்பிச் செல்லும் போது பிடிக்கப்படும் நபர்கள் கடவுச் சீட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இலங்கை செல்ல உரிய ஆவணங்கள் வழங்கினால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒரு மாத காலத்தில் கடவுச் சீட்டு வழங்கப்படும்" என்றார். (பிபிசி)


Add new comment

Or log in with...