சிகிச்சை பெற்று வந்த மற்றைய பிரித்தானிய ரக்பி வீரரும் மரணம் | தினகரன்

சிகிச்சை பெற்று வந்த மற்றைய பிரித்தானிய ரக்பி வீரரும் மரணம்

சிகிச்சை பெற்று வந்த மற்றைய பிரித்தானிய ரக்பி வீரரும் மரணம்-2nd Briton Rugby Player Dies

 

நேற்று முன்தினம் (13) ஞாயிற்றுக்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய ரக்பி வீரர் இன்று (15) மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்த 22 வீரர்கள் உள்ளடங்கிய பிரித்தானிய ரக்பி அணி, கடந்த சனிக்கிழமை (12) கொழும்பில் இடம்பெற்ற சிநேகபூர்வ ரக்பி போட்டியில் பங்குபற்றியதோடு, அங்கு இடம்பெற்ற இரவு விருந்திலும் கலந்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் தங்கியிருந்த சுற்றுலா விடுதிக்கு திரும்பியதோடு, மீண்டும் அங்கிருந்து கொள்ளுபிட்டியிலுள்ள இரவு விடுதி ஒன்றில் பொழுதை கழித்துள்ளனர்.

பின்னர் நேற்று முன்தினம் (13) அதிகாலை, இரு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் நிலைய ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹோட்டல் முகாமைத்துவ ஏற்பாட்டில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்தே குறித்த இருவருள் ஒருவரான ஹாவட் தோமஸ் அன்ட்ரூ எனும் 26 வயதான ரக்பி வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்ததோடு, பெட் தோமஸ் ரீட் எனும் 27 வயதான பிரித்தானிய வீரர் கவலைக்கிடமான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று (15) அவரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (13) இறந்தவரின் பிரேத பரிசோதனை, இன்றைய தினம் (15) கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி எம்.என். ரூஹுல் ஹக்கினால் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் குறித்த நபர், காயத்தின் காரணமாகவோ, நோய் வாய்ப்பட்டதன் காரணமாகவோ மரணிக்கவில்லை என முடிவு செய்யப்பட்டு திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் உடல் பாகம், மேலதிக பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அதிகாரிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...