குறுந்தேசியவாத தலைமைகள் முள்ளி நினைவேந்தலைப் பயன்படுத்துவது பச்சைத் துரோகம் | தினகரன்

குறுந்தேசியவாத தலைமைகள் முள்ளி நினைவேந்தலைப் பயன்படுத்துவது பச்சைத் துரோகம்

குறுந்தேசியவாத தலைமைகள் முள்ளி நினைவேந்தலைப் பயன்படுத்துவது பச்சைத் துரோகம்-Mullivaaikkal-Rememberance-NDMLParty-Senthivel

 

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி காட்டம்

கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளின் அனுபவங்களில் இருந்து பட்டறிவுடனான பாடங்களைப் பெற்று, மக்களின் விடுதலைக்கான தூரநோக்குடைய மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க உறுதியெடுத்துக்கொள்வது காலத்தின் தேவையாகும். இதனைக் கவனத்தில் கொள்ளாது, தமிழ்க் குறுந்தேசியவாதத் தலைமைகள் ஒவ்வொன்றும் தமக்குள் வாக்கு வேட்டைக்கும், பதவிகள் பெற்று ஆதிக்க அரசியலை நீடிக்கவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பயன்படுத்துவது, உயிர்நீத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும் எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி காட்டமாகத் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.க. செந்திவேல் இன்றைய தினம் (14) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையையும், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வையும், மனித உரிமைகளையும் மனித நேயத்தையும் மதிக்கும் ஒவ்வொருவரும் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கொடூர மனிதப் பேரவலத்தை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பது அவசியமாகும். அந்த வகையில், போரின் இறுதி நாட்களில் குருதி வெள்ளத்தில் மனிதப் படுகொலைக்கு உள்ளாகி உயிர்நீத்த அனைவருக்கும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி அஞ்சலி செலுத்துகின்றது.

அதேவேளை, கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளின் அனுபவங்களில் இருந்து பட்டறிவுடனான பாடங்களைப் பெற்று, மக்களின் விடுதலைக்கான தூரநோக்குடைய மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க உறுதியெடுத்துக்கொள்வது காலத்தின் தேவையாகும். இதனைக் கவனத்தில் கொள்ளாது, தமிழ்க் குறுந்தேசியவாத தலைமைகள் ஒவ்வொன்றும் தமக்குள் வாக்கு வேட்டைக்கும், பதவிகள் பெற்று ஆதிக்க அரசியலை நீடிக்கவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பயன்படுத்துவது, உயிர்நீத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

இவ்வாறு எதிர்வரும் பதினெட்டாம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே இன முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டு பேரினவாத ஒடுக்குமுறையாகவும், கொடிய போராகவும் வளர்த்தெடுக்கப்பட்டது. நியாயமான அரசியல் தீர்வை மறுத்துவந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம், போர் மூலமான இராணுவத் தீர்வையே நடைமுறைப்படுத்தியது. அதுவே முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைக்கும் காரணமாகியது.

இத்தகைய மனிதவதைப் பேரவலத்தை நடாத்தி முடிக்க பேரினவாத ஆளும் வர்க்கத்திற்குப் பக்கபலமாகவும், வழிகாட்டியாகவும் இருந்து அமெரிக்க, ஐரொப்பிய ஏகாதிபத்தியங்களும், இந்திய பிராந்திய மேலாதிக்க சக்தியும் ஏனைய வல்லாதிக்க சக்திகளும் பங்களித்த வரலாற்று உண்மையை எவராலும் மறைத்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது.

ஆனால், துரதிஷ்டம் என்னவென்றால், இன்றைய தமிழ்த் தலைமைகள் அதே அமெரிக்க, ஐரோப்பிய, இந்தியத் தரப்புக்கள் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வைப் பெற்றுவிட முடியும் என்னும் வீண் நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் பரப்பி வருவதாகும்.

எனவே, இவ் ஏமாற்று அரசியலுக்கு அப்பாலான, மக்களுக்கான மாற்று அரசியல் பாதையில் பயணிப்பது பற்றித் தூரநோக்குடன் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். எமது அரசியல் தலைவிதியை ஆதிக்க அரசியல் தலைமைகளிடமிருந்து மீட்டு எமது சொந்தக் கரங்களுக்குக் கொண்டுவர இம் முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என்றும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(செல்வநாயகம் ரவிசாந், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...