ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதில் அமர்வதற்கே முயற்சி | தினகரன்

ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதில் அமர்வதற்கே முயற்சி

மக்களுக்கு வழங்கிய ஆணையை மறந்து ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரப் ​போட்டியில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த மூன்றரை வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதில் அமர்வதற்கான முயற்சியிலே பிரதமரும் ஜனாதிபதியும் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, மஹிந்த ஆட்சி தோற்கடிக்கப்பட்ட ஆட்சி மாற்றப்பட்ட போதும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் தவறிவிட்டது. கடந்த 3 மூன்று வருடங்களும் வீணாக கடந்து விட்டன.மக்களுக்கு வழங்கிய ஆணையை மறந்து ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரப் ​போட்டியில் ஈடுபட்டுள்ளனர். தமது கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்க்கவே ஐ.தே.க கடந்த 3 வருடத்தையும் செலவிட்டது.

பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததற்கான காரணத்தை ஜனாதிபதி இங்கு கூறுவார் என எதிர்பார்த்தோம். ஐ.ம.சு.முவில் இருக்கும் 95 எம்.பிகளில் 23 அல்லது 24 பேர் தான் அரசாங்கத்துடன் உள்ளனர். ஒரு குழு இணைந்துள்ள அரசை தேசிய அரசாங்கம் என்று எப்படி கூற முடியும். மஹிந்த ஆட்சியில் ஐ.தே.கவில் இருந்து 17 பேர் அரசில் இணைந்தார்கள். அதுவும் தேசிய அரசாங்கமா?

கடந்த 4 வருட காலத்தில் பொருளாதார அரசியல் ரீதியான நெருக்கடிகளை தான் இந்த அரசாங்கம் உருவாக்கியது.

திருடர்கள் மோசடிகாரர்களை பிடிக்க சட்டம் இயற்றியதாக கூறினாலும் திருடர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பிலே இருக்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் செயலாளர், மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளர்,தற்போதைய ஜனாதிபதியின் பிரதம செயலக அதிகாரி, பிரதமர் நியமித்த மத்திய வங்கி ஆளுநர் என நாட்டுதலைவர்களின் பிரதானிகள் தான் மோசடிகள் திருட்டுகள் தொடர்பில் பிடிபட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதம செயலக பிரதம அதிகாரியினால் கந்தளாய் சீனி கம்பனியின் இரும்புகளை விற்க முடியாது. ஜனாதிபதியினதோ அமைச்சர் ஒருவரினதோ ஊடாகத்தான் இது தொடர்பில் முடிவு எடுக்க முடியும். அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்க தூதரகத்தை விற்பனை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷவின் உறவினரான அவரின் கொடுக்கல் வாங்களுடன் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும். எனவே இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவிப்பு விட வேண்டியது அவரின் பொறுப்பாகும்.

ரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்ட உதயங்க வீரதுங்கவும் வெளிநாட்டில் மறைந்துள்ளார்.இவரை மஹிந்த ராஜபக்ஷ வேறுநாடுகளில் சந்தித்தார்.

அவருக்கு எதிராக இங்கு வழக்கு விசாரிக்கப்படும் நிலையில் அவரை திரும்பி வருமாறு ஏன் மஹிந்த வினால் கூற முடியாது.

சந்திரிகா,மஹிந்த,மைத்திரி,ரணில் போன்றோரின் நிழல்கள் தான் திருடுகின்றன. பாராளுமன்ற எம்.பிகளில் பலருக்கு மோசடி குறித்து பேச தகுதி கிடையாது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...