நீதித்துறை மீதான நம்பிக்ைகயை கட்டியெழுப்புவது அவசியம் | தினகரன்

நீதித்துறை மீதான நம்பிக்ைகயை கட்டியெழுப்புவது அவசியம்

 

நீதித்துறை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் 67 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டம் அண்மைக் காலத்தில் சகலராலும் பேசப்படுகின்ற ஒரு விடயமாகவே காணப்பட்டது. அதுவும் எதிர்த்தரப்பினர்களில் ஒரு பிரிவினருக்கு இது கிலியை ஏற்படுத்தும் ஒரு விவகாரமாகவே உள்ளதை அவர்களின் வாதங்கள் வெளிக்காட்டி நின்றன. அரசியல் பழிவாங்கல் நோக்குடன் கூடியதாக இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

உண்ட நஞ்சுக்குத்தான் பயப்பட வேண்டும். உண்ணாத நஞ்சு குறித்து ஏன் அஞ்ச வேண்டும் அல்லது அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி இங்கே எழுகிறது.

2015இல் நல்லாட்சி அரசு பதவிக்கு வரும்போது நாட்டு மக்களுக்கு அளிந்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டே விசேட நீதிமன்றங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கும், நீதியமைச்சர் தலதா அத்துகோரள அரசின் இந்த நடவடிக்கை எவர் மீதும் பழிவாங்கும் நோக்கத்துடன் கூடியதல்லவெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒன்றிணைந்த எதிரணியினர் எப்படியேனும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் கொண்டுவரப்பட்ட திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதையடுத்து அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் எந்தவொரு தரப்பையோ, நபரையோ இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டதல்ல. நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட சட்டமூலமே கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை, பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களை கட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்பது கட்டாயமானதாகவே நோக்கவேண்டியுள்ளது. இதனைச் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்குரியதாகும். இதில் எவர் விடயத்திலும் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற போதிலும் அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் நீண்ட கால தாமதம் காணப்படுகின்றது. இது மக்களுக்களித்த வாக்குறுதிகள் மீறப்படுவது போன்ற பார்வையையே காட்டுகின்றது. மோசடிகளில் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தக் காலதாமதம் வகை செய்வதாகவே உணர முடிகிறது. கடந்த காலத்தைப் போன்று நல்லாட்சியிலும் தாமதத்துக்கு இடமளித்தால் மக்கள் நம்பிக்கையிழக்கும் நிலையே உருவாகலாம்.

உயர்நீதிமன்றங்களில் நாளாந்தம் வழக்குகள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வழக்குகள் குவிந்து காணப்படுவதால் ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்படுவதன் காரணமாகவே விசேட நிதிமன்றங்கள் மூன்றை அமைக்க நீதியமைச்சு முடிவெடுத்தது. இதில் எந்தவிதமான உள்நோக்கங்களும் கிடையாது. பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுப்பதே நோக்கமென அரசு தெரிவித்திருக்கின்றது. இதனை பெரும் தவறாகக் கருத முடியாது.

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்த நிலையிலும் ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். அரசு குற்றவாளிகளை பாதுகாக்கின்றதா என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

ஊழல் மோசடியை நிறுத்துவதற்கு சட்டரீதியான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு சிவில் சமூகங்கள் உட்பட புத்திஜீவிகள் பலதடவைகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பிரதிபலனாகவே ஊழல் மோசடிகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றங்களை அமைக்க அரசு திட்டம் வகுத்து இதன் பொருட்டே நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. உண்மையிலேயே வழக்குகள் தேங்குவதை முடிவுக்குக் கொண்டுவர இத்திருத்தச்சட்டம் வழிவகுக்கும். ஆரம்பத்தில் மூன்று நீதிமன்றங்களை மட்டுமே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட நீதிமன்றங்கள் விடயத்தில் மட்டுமல்ல சாதாரணமாக உள்ள நீதிமன்றங்கள் விடயத்தில் கூட குற்றமிழைத்தோர் தப்பிப்பதற்கு வழிதேடிக் கொண்டிருப்பதையே நோக்க வேண்டியுள்ளது. ஊழல் மோசடிகளில் தொடர்புபட்டவர்கள் இருப்பினும் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.'பெரிய திமிங்கிலங்கள் தப்புகின்றன. நெத்தலிகள் மட்டுமே வலையில் சிக்கி மாய்கின்றன. இந்தநிலை மாற வேண்டும்' என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு இப்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதே என்பதை மறுக்க முடியாது. ஊழல், மோசடிக்காரர்கள் இனியும் தப்புவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. விரைவான நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளுக்கு உச்சபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும். நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு இந்தப் புதிய திருத்தச் சட்டமூலம் வழிவகுக்கும் என நம்பலாம்.


Add new comment

Or log in with...