கோட்டாபய இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்? | தினகரன்

கோட்டாபய இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்?

சுயாதீன நீதித்துறை காரணமாக இருக்கலாம் என்கிறார் ராஜித

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன் என்பது தனக்கு புரியவில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர். ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.

"இதற்கான காரணத்தை தட்டிக் கேட்டதால் தான் எல்லோரும் என்னை தூற்ற ஆரம்பித்தனர். இந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல. கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோதே நான் இவ்விடயத்தை தட்டிக் கேட்டேன். ஆனால், அதற்கான பதில் எனக்கு இன்னும் தெரியவில்லை" என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுயாதீன நீதித்துறையை நிறுவுவதற்காக இந்த அரசாங்கம் ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாகவே கோட்டாபய ராஜபக்ஷ இன்றும் கைது செய்யப்படாமல் இருக்கின்றார் என்றும் அமைச்சர் கூறினார்.

மத்திய வங்கி பிணை முறிவிவகாரத்தையடுத்து இரண்டு மாதங்களுக்குள் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மிக் விமானக் கொள்வனவு மோசடியில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக இரண்டு வருடங்களுக்குப் பின்னரே சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் விசேட நீதிமன்றத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வழக்குகளை பிரதம நீதியரசரே தீர்மானிப்பாரென்றும் அமைச்சர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...