எரி பொருட்களின் விலை அதிகரிப்பு | தினகரன்

எரி பொருட்களின் விலை அதிகரிப்பு

மீனவர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு சலுகை

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கமைய விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளபோதும் கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட விலைகளிலும் குறைவான விலையே தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். இதன்படி எரிபொருட்களின் லீற்றருக்கான புதிய விலைகளாக பெற்றோல் 92 ஒக்டெய்ன் 137 ரூபாவாகவும் பெற்றோல் 95 ஒக்டெய்ன் 148 ரூபாவாகவும் ஓட்டோ டீசலுக்கு 109 ரூபாவாகவும் சுப்பர் டீசலுக்கு 119 ரூபாவாகவும் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மண்ணெண்ணெய் விலை மலிவடைந்ததனால் அதன் பாவனை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் 48 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதன் விலை 44 ரூபாவிலிருந்து 101 ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும் மீனவர்களுக்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் பழைய விலையான 44 ரூபாவுக்கே தொடர்ந்தும் மண்ணெண்ணெயை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய மீனவர்களும் சமுர்த்தி பயனாளிகளும் தமது கூப்பன்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து 44 ரூபாவுக்கு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பஸ் ஓட்டுனர்கள் மற்றும் கனரக வாகன சாரதிகள் மண்ணெண்ணெய்யின் மலிவு விலையை காரணமாகக் கொண்டு டீசலுடன் கலந்து மண்ணெண்ணெயை பயன்படுத்தியதே அதன் நுகர்வு திடீரென அதிகரித்தமைக்கான காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்தபோதும் 2014 ஆம் ஆண்டு நாம் எரிபொருளில் பாரிய விலை குறைப்பை செய்திருந்தோம்.இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்தது. பல வழிகளில் இந்த இழப்பை ஈடுசெய்ய பெற்றோலியக் கூட்டுதாபனம் முன்வந்துள்ளபோதும் தற்போது மாதாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம் நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விலை மறுசீரமைப்பின் மூலம் இந் நட்டத்தை ஈடுசெய்ய முடியுமென பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...